அரசு ஊழியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம்… அதிரடியாக அனுமதியளித்த உயர்நீதிமன்றம்  !!!

உயர்நீதிமன்ற  தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர சென்னை உயர்நிதிமன்ற மதுரை கிளை அனுமதியளித்துள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து  கடந்த 7 மற்றும் 8ஆம் தேதிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில்,  உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நீதிமன்ற தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நிதிமன்ற மதுரை கிளையில் வேகரன் என்பவர் இன்று வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொண்ட நீதிபதிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளனர்.