புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துச்செய்து, பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர அரசாணை பிறப்பிக்க வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

அதற்கு முன், கடந்த ஊதிய மாற்றத்தில் ஏற்பட்டுள்ள முரண்களைக் களைந்து, சரிசெய்யப்பட்ட ஊதியத்தின் அடிப்படையில், 8வது ஊதிய மாற்றம் ஏற்படுத்த வேண்டும். மேலும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் சிறப்புக் காலமுறை ஊதியங்களை ஒழித்து, வரையறுக்கப்பட்ட ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

8வது ஊதிய மாற்றம் ஏற்படுத்தப்படும் வரை இடைக்கால நிவாரணமாக 20 சதவிகித ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று பேரணி நடத்துவதாக அறிவித்தனர். இந்த பேரணி, சென்னை அண்ணாசாலையில் உள்ள மன்றோ சிலையில் இருந்து தொடங்கி, தலைமை செயலகம் சென்றயும் என அறிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவை சேர்ந்தவர்கள் இன்று சென்னை தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக செல்வதாக அறிவித்தனர். இதைதொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் இன்று சென்னைக்கு படையெடுத்தனர்.

இதையொட்டி திருவள்ளூரில் பேரணியாக செல்வதற்காக வந்த ஆசிரியர்களை, திருவள்ளூர் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் கைது நடவடிக்கையை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர்.

இதேபோல், சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த ஆசிரியர் கூட்டமைப்பின் வாகனங்களை, வாணியம்பாடி அருகே சுங்கச்சவாடியில் போலீசார் தடுத்து நிறுததினர். இதனால், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், டோல்கேட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.