கோவை

ஜெயலலிதா பெயரை சொல்லி ஓட்டு வாங்கியுள்ளது அ.தி.மு.க. அதில் பங்கு போட, ஆட்சியில் பங்கு போட முயற்சிக்க கூடாது தி.மு.க. இதை தட்டிக் கேட்கும் இலட்சிய தி.மு.க.” என்று டி.ராஜேந்தர் சொன்னார். 

பவானி ஆற்றில் கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதை கண்டித்து இலட்சிய தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது.

கோவை மாவட்டத் தலைவர் ஜாக் தலைமை வகித்தார். மாநில துணைபொதுச் செயலாளர் எம்.ஏ. சார்லஸ் முன்னிலை வகித்தார்.

இதில் இலட்சிய தி.மு.க. தலைவரும், பொதுச் செயலாளருமான டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கேரளாவுக்கு எதிராக பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதில், கட்சி நிர்வாகிகள் பரமசிவம், செரீப், வைகை சக்தி, அஜய், ரோஷன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் முடிந்தபின்னர் டி.ராஜேந்தர் அளித்த பேட்டி:

“பவானி ஆற்றில் கேரள அரசு 6 தடுப்பணைகள் கட்ட திட்டமிட்டுள்ளது. இதில் 2 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி பவானி ஆற்றிலிருந்து கேரள அரசு 6 டி.எம்.சி. தண்ணீர் தான் எடுக்க வேண்டும். ஆனால் தடுப்பணைகள் கட்டி 6 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் எடுக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் பாலைவனமாகி விடும்.

எனவே தடுப்பணைகள் கட்டுவதை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழகத்திலிருந்து தான் அரிசி முதல் மின்சாரம் வரை கேரளாவுக்கு செல்கிறது. ஆனால் அவர்கள் நமக்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள்.

தமிழகத்தை யார் ஆள்கிறார்கள்? என்பது பற்றி கவலையில்லை. ஆனால் யார் ஆளக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம்.

தற்போது உள்ள அரசியல் சூழலில் எம்.எல்.ஏ.க்களை சிறை வைத்து பேருந்தில் அழைத்து செல்வது எல்லாம் நடக்கிறது. இது ஏன் நடக்கிறது என்று தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்.

75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றார். அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்று யாருமே கேள்வி கேட்கவில்லை. அவரை யாரையுமே பார்க்கவிடவில்லை. இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அது உள்கட்சி விவகாரம். ஆனால் அவர் தமிழ்நாடு முதலமைச்சராக ஆகி விடக்கூடாது என்பதற்காக நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம்.

சசிகலாவை அ.தி.மு.க.வில் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் வேண்டுமானால் ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தமிழகத்தின் முதலமைச்சர் யார் என்பது பற்றி முடிவு செய்ய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனசாட்சிப்படி, விசுவாசத்துடன், நன்றியுடன், சுய உணர்வுடன் செயல்பட வேண்டும்.

முதலமைச்சர் பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சிரித்து பேசியது தவறு என்று சசிகலா சொல்கிறார். இது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. பலத்தை நிரூபிப்போம் என்று முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகிறார். அவர் என்ன நினைக்கிறார் என்று வெளிப்படையாக சொல்ல வேண்டும். அவருக்கு உதவி செய்பவர்கள் யார்? என்று தெரிந்தாக வேண்டும்.

ஜெயலலிதா பெயரை சொல்லி ஓட்டு வாங்கியுள்ளது அ.தி.மு.க. அதில் பங்கு போட, ஆட்சியில் பங்கு போட முயற்சிக்க கூடாது தி.மு.க. இதை இலட்சிய தி.மு.க. தட்டி கேட்கும்” என்று டி.ராஜேந்தர் கூறினார்.