விவசாயத்தினை பாதுகாப்பது அனைவரின் கடமை: உதயநிதி ஸ்டாலின்!
விவசாயத்தினை பாதுகாப்பது நமது அனைவரின் கடமை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் ரூ.40.00 கோடி மதிப்பீட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பினை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இந்த பொது சுத்திகரிப்பு நிலையம் தினசரி 20.00 இலட்சம் லிட்டர் கழிவுநீரை சேகரித்து சுத்திகரிப்பு செய்யும் வகையில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.
மொத்த மதிப்பான ரூ.40.00 கோடியில் அரசின் பங்காக ரூ.20.00 கோடியும் மற்றும் சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர்கள் சார்பாக ரூ.20.00 கோடியும் வழங்குவதற்கும் ஒப்புதல் கடிதம் வழங்கியுள்ளனர்.
இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தொழிற்சாலைகள் கழிவுநீரை நேரடியாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு மட்டுமே கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அதேபோல், கழிவுநீரை நிலத்தில் கண்டிப்பாக விடக்கூடாது. காற்று மாசு அடைகின்ற வகையில் புகையோ, கழிவோ வெளியேறாமல் தொழிற்சாலைகள் பாரத்துக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.
மேலும், சிப்காட் வளாகத்தில் தேங்கியிருக்கும் சுமார் 63,000 டன் கழிவுகளை இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளுக்கு விரைவில் எடுத்து செல்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “பொதுமக்களின் நலனுக்காக சிப்காட் வளாகத்தில் உள்ள நல்லான் ஓடை தூர்வாரி சுத்தப்படுத்தி மழைநீர் ஓடுகின்ற வகையில் பாதுகாக்கப்படும். சிப்காட் வளாகத்தில் ஏற்கனவே மாசுபட்ட நிலத்தடி நீரை உறிஞ்சி சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறு மூலம் நிலத்தடி நீர் எடுத்து சுத்தப்படுத்தப்படும். தேவையான இடத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து மாசுபட்ட தண்ணீரை எடுத்து சுத்தப்படுத்தப்படும். அவ்வாறு சுத்திகரிக்கப்பட்டு வரும் தண்ணீர் மீண்டும் தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப்படும்.” என்றார்.
விவாசய நிலங்களும், நீர்நிலைகளும் பாதிக்கப்படாமல் விவசாயத்தினை பாதுகாப்பது நமது அனைவரின் கடமை என வலியுறுத்திய உதயநிதி ஸ்டாலின், அரசின் விதிமுறைகளை தொழிற்சாலைகள் முழுமையாக பின்பற்றிட வேண்டுமெனவும் மற்றும் மக்களின் நலனுக்காக அரசு அளிக்கின்ற பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் நல்லமுறையில் பெற்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.