it raid
ஆர்.கே நகர் தொகுதியில் கடந்த 2 வாரங்களில் மட்டும் அமைச்சர் விஜய பாஸ்கர் மூலம் 89 கோடி ரூபாய் அளவுக்கு பணம் புழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டி.டி.வி.தினகரன், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் போன்றவற்றை அள்ளி வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்த இன்று அதிகாலை முதல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், முன்னாள் எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், எம்எல்ஏ ஹாஸ்டல் என இன்று 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று நடத்திய சோதனையில் இது வரை 4 கோடியே 50 லட்சம் பணம், 85 கோடி ரூபாய் மதிப்பிலான கொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த ஆவணங்கள் கடந்த இரண்டு வாரங்களில் அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் 89 கோடி ரூபாய் பணம் கையாளப்பட்டதற்கான ஆதாரங்கள் என வருமான வரித்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி தெரிவித்துள்ளனர்.
இந்த ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை செய்து, வருமான வரித்துறையினர் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிகிறது.
