It is not true that Ashok Kumar wrote a letter before suicide
அசோக் குமார் தற்கொலைக்கு முன்பு கடிதம் எழுதியதாக கூறப்படுவது உண்மையில்லை எனவும் எங்களுடன் எந்தவித பண தொடர்பும் செய்யாத அசோக் குமார் எங்களை கடிதத்தில் எழுதி வைத்துள்ளார் என்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் மேலாளர் முரளி தெரிவித்துள்ளார்.
மெளனராகம், நாயகன் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த மிகப் பெரிய தயாரிப்பாளர் ஜிவி என அழைக்கப்படும் ஜி,வெங்கடேஸ்வரன். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார். தற்போது அதே கந்துவட்டி கொடுமையால் மேலும் ஒரு தற்கொலையை சந்தித்திருக்கிறது தமிழ் திரையுலகம்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் சசிகுமாரின் படத் தயாரிப்பு நிறுவனமான கம்பெனி புரொடக்சன்ஸ் . நிறுவனத்தில் நிர்வாகியாகவும், சசிகுமாரின் படங்களின் இணை தயாரிப்பாளராகவும் இருந்த அசோக்குமார் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன், கந்துவட்டியால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மதுரை பைனான்சியர் அன்பு செழியனிடம் வாங்கிய பணத்துக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு மேல் பல லட்சங்கள் வட்டியாக கொடுத்திருந்தும் தொடர்ந்து கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாகவும், தன்னையும் தனது குடும்பத்தினரையும் கேவலமாக அன்பு செழியின் மிரட்டுவதாகவும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
இதையடுத்து அன்பு செழியன் மீது வழக்கு பதிவு செய்து அவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், அன்புசெழியன் மீதான குற்றசாட்டை அவரின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் மேலாளர் முரளி மறுத்துள்ளார். இதுகுறித்து கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அசோக் குமார் தற்கொலைக்கு முன்பு கடிதம் எழுதியதாக கூறப்படுவது உண்மையில்லை என தெரிவித்துள்ளது.
அசோக் குமார், சசிகுமாரின் உதவியாளர். நாங்கள் அசோக் குமார் என்பவரிடம் எந்த பண வரவு செலவும் செய்யவில்லை எனவும் சசிகுமார் தான் பணம் பெற்றுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்களுடன் எந்தவித பண தொடர்பும் செய்யாத அசோக் குமார் எங்களை கடிதத்தில் எழுதி வைத்துள்ளார் என்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் கடந்த 20 ஆண்டுகளாக சினிமா தொழில் செய்து வரும் எங்கள் மீது எங்கும் எந்த புகாரும் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
