It asked for a bribe of 15 thousand to 14 thousand decrease of gracious Government employee arrested

கோவை அருகே பட்டா வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் அதிகமாக இருக்கிறது என்று சொன்னதற்கு பெருந்தன்மையோடு ரூ.14 ஆயிரம் கொடுத்தால் போதும் என்ற நில அளவை உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கும்போது கையும், மெய்யுமாக பிடிப்பட்டார்.

கோவையை அடுத்த சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் தீனதயாளன் (26). இவருடைய தந்தை கந்தசாமி. இவருக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் சுல்தான்பேட்டையை அடுத்த மலைப்பாளையம் என்ற இடத்தில் இருக்கிறது. அதே பட்டா எண்ணில் கிருஷ்ணசாமி என்பவருக்கும் இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது.

தீனதயாளன் தனது தந்தை கந்தசாமியின் பெயரில் உள்ள நிலத்திற்கு மின்சார இணைப்பு பெற மின்சார வாரியத்தை அணுகினார். அதற்கு பட்டா உங்கள் தந்தை பெயரில் இருந்தால்தான் தனியாக மின்சார இணைப்பு கொடுக்க முடியும். எனவே, தந்தை பெயரில் பட்டா வாங்கி வாருங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால், தீனதயாளன் தன் தந்தை பெயருக்கு தனி பட்டா கேட்டு சூலூர் தாலுகா அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு, நில அளவை உதவி ஆய்வாளர் சுப்பிரமணி (42) என்பவரிடம் கடந்த ஜனவரி மாதம் 8-ஆம் தேதி விண்ணப்பித்தார். அதன்பிறகு சில தினங்களில் சுப்பிரமணி, கந்தசாமிக்குச் சொந்தமான இடத்தை அளந்தார். ஆனால், தனிப்பட்டா வழங்கப்படவில்லை.

எனவே, கடந்த 17–ஆம் தேதி தீனதயாளன், நில அளவை உதவி ஆய்வாளர் சுப்பிரமணியை சந்தித்து தனி பட்டா கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு சுப்பிரமணி தனி பட்டா கொடுப்பதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், தீனதயாளன் ரூ.15 ஆயிரம் அதிகமாக இருக்கிறது. கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

அதற்கு சுப்பிரமணி ஆயிரம் ரூபாய் குறைத்துக் கொண்டு 14 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தனி பட்டா தருகிறேன் என்று கூறினார். ஆனால், அதுவும் தீனதயாளின் நிலைக்கு அதிகம் என்பதாலும், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லை என்பதாலும் கோவை லஞ்ச ஒழிப்பு காவலில் புகார் அளித்தார்.

துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் ஆய்வாளர் கனகசபாபதி மற்றும் காவலாளர்கள் சூலூர் தாலுகா அலுவலகத்திற்கு நேற்று மதியம் சென்றனர். அப்போது தீனதயாளன், நில அளவை உதவி ஆய்வாளர் சுப்பிரமணியிடம் ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.

அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவலாளர்காள், சுப்பிரமணியை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சப்பணம் ரூ.14 ஆயிரத்தையும் கைப்பற்றினர்.

பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.