கரூர்

கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் சாலை மிகவும் மோசமாக பழுதடைந்த நிலையில்  இருந்தும் அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது. கோவை - சென்னையை இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே சாலை மேடு பள்ளமாக மாறி, பழுதடைந்துள்ளது. ஆனால், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் எந்திரங்கள் கொண்டு சாலையை அப்படியே பெயர்த்து எடுத்து ஒரு பகுதியில் போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர்.

மாயனூர் பெட்ரோல் பங்க் அருகில் தொடங்கி மாயனூர் தண்ணீர் பாலம், கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம், பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் சாலையை பெயர்த்து எடுத்துள்ளனர். பெயர்த்தெடுத்த பகுதிகளில் மீண்டும் சாலை அமைக்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஒரு பகுதியில் பள்ளம் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் நாள்தோறும் சாலை விபத்தை சந்திக்கின்றனர். ஒரு நாளைக்கு குறைந்தது 5-க்கும் மேற்பட்டோர் விபத்துகள்  இங்கு ஏற்படுகின்றன. அப்படி இருந்தும், சாலை அமைப்பது குறித்து அதிகார்கள் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் விபத்தில் சிக்கினர். இதனையடுத்து ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து கிருஷ்ணராயபுரம் கள்ளுக் கடை பாலம் அருகே கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பாலசுந்தரம், மாயனூர் காவல் உதவி ஆய்வாளர் ஜாபர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, விரைவில் சாலை சீரமைக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

மக்களின் இந்த திடீர் சாலை மறியலால் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.