Is Central government is reason for the state government action

திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டது மாநில அரசின் செயல் எனவும் அதற்கு மத்திய அரசு எவ்வாறு காரணமாக முடியும் எனவும் தமிழக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் ஈழத் தமிழர்கள் பலர் இலங்கை ராணுவத்தால் கொலை செய்யப்பட்டனர்.

குண்டுகளை பயன்படுத்தக் கூடாது என்ற விதியையும் மீறி தமிழர்கள் அதிகம் வசித்த பகுதிகளான யாழ்ப்பானம்,திரிகோணமலை, மன்னார், வன்னி மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட இடங்களில் குண்டுகளை வீசியது இலங்கை ராணுவம்.

இந்த இனப்படுகொலையை நினைவு கூறும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படுவது உண்டு.

ஆனால் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்ற பிறகு நினைவேந்தல் நிகழ்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தடையையும் மீறி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த மே 17 இயக்கத்தினர் கடந்த 17 ஆம் தேதி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் திருமுருகன் காந்தி, இளமாறன், டைசன், அனுன்குமார் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு மத்திய அரசின் தூண்டுதலே காரணம் என குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மாநில அரசின் செயலுக்கு மத்திய அரசு எவ்வாறு காரணமாக முடியும் என கேள்வி எழுப்பினார்.

மேலும் தமிழக மக்களுக்கு மத்திய அரசு நன்மையான திட்டங்களை தேடி தேடி செய்வதாகவும் பிரதமர் மோடி இலங்கைக்கு இரண்டு முறை சென்று அங்குள்ள தமிழர்களை சந்தித்து வந்துள்ளார் எனவும் தெரிவித்தார்.