Irony Alert! IPS Officer Held For Cheating Scored Good Marks In UPSCs Ethics Paper
ஐஏஎஸ்., தேர்வில் முறைகேடாக மோசடி செய்து தேர்வு எழுதிய செய்த ஐபிஎஸ்., அதிகாரி சபீர் கரீம் விவகாரத்தில் தோண்டத் தோண்ட பூதம் கிளம்புவது போல், ஒவ்வொன்றாக செய்திகள் வெளி வருகின்றன.
இஸ்ரா சார்பில் நடந்த கிளார்க் தேர்வில், சபீர் கரீமின் சகோதரி முறை உறவினர் ஒருவர் எழுதியுள்ளாராம். கேரளாவில் நெடுமஞ்சேரி அருகில் உள்ள சபீர் கரீமின் வீட்டிலும், கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள பயிற்சி மையங்களிலும் தமிழ்நாடு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
கரீம் நடத்தி வந்த பயிற்சி மையத்தில் கேரள அரசு தேர்வாணையத் தேர்வு மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ நடத்திய தேர்வின் கேள்வித் தாள்கள் சிக்கியுள்ளன. இது ஆய்வு செய்தவர்களிடம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தேர்விலும் கூட, ஹைடெக் லெவலில் முறைகேடாக தேர்வு எழுத எல்லா வேலைகளையும் செய்திருக்கிறார் சபீர் கரீம். அவரது அசத்தல் ஐடியாக்களைப் பார்த்து போலீஸார் மிரண்டுதான் போயுள்ளனர். இப்படியெல்லாம் திட்டமிட முடியுமா என்று மலைத்துள்ளனர் இந்த விசாரணையில் ஈடுபட்ட போலீஸார்.
அப்படி என்ன செய்தார்? ஒரு மைக்ரோ கேமரா. அதனுடன் இணைந்த சிறிய கருவி. அதில் ஒரு மிகச்சிறிய அளவில் காதில் மாட்டக் கூடிய நுணுக்கமான ஸ்பீக்கர். இதனை எவராலும் எளிதில் கண்டறிந்து விடமுடியாதுதான்.
இந்த கேமராவானது, ப்ளூடூத்துடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும். மேஜையில் இருக்கும் கேள்வித் தாளை கேமரா படம் எடுக்கும். அது ப்ளூடூத் வழியாக, வெளியில் மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு, அதன் மூலம் எங்கோ உள்ள ஒருவருக்கு செய்தி அனுப்பும். அவர் அளிக்கும் பதில்கள் காதுக்குள் பொருத்தப் பட்டிருக்கும் அந்தச் சிறிய ஸ்பீக்கர் மூலம் இவருக்குக் கேட்கும்.
இப்படித்தான் தொழில்நுட்பத்தை இவர் தேர்வு எழுத பயன்படுத்தியிருக்கிறார்.
இவரது மனைவி ஜாய்ஸி ஜாய்ஸ், சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் கோச்சிங் செண்டரில் பணியாற்றியவர். 2015 பேட்சில் ஐபிஎஸ் தேர்வான கரீம் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட உதவிகரமாக இருந்தவர்.
யுபிஎஸ்சியில் ஒழுக்கம் குறித்த எதிக்ஸ் தேர்வுத் தாள் 2013ல் அறிமுகப் படுத்தப் பட்டது. அது தேர்வு எழுதுபவரின் ஒழுக்கத் திறனை சோதிப்பது. சபீர் விஷயத்தில் அது தவிடுபொடியாகியுள்ளது.
இந்நிலையில் சபீர் கரீம், கேரளாவிலும் ஹைதராபாத்திலும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை நடத்தி வந்துள்ளார். இதில், ஹைதராபாத் பயிற்சி மையத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்பில் கேள்வித் தாள்களும், அதற்கான விடைகளும் இருந்துள்ளன. எனவே, கேரள அரசு தேர்வாணையத் தேர்வு மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ நடத்திய தேர்வு என இந்த இரண்டு தேர்விலும் மோசடி செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
