திண்டுக்கல்

ஆதிவாசி மக்களுக்காக போராடுவேன் என்று கூறிய இரோம் சர்மிளாவிற்கு நடக்கவிருக்கும் காதல் திருமணத்தை தடுத்து நிறுத்தி, அவரைக் கொடைக்கானலை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆதிவாசி மக்கள் மனு கொடுத்துள்ளனர்.

மணிப்பூர் மாநில சமூகப் போராளி இரோம் சர்மிளா. இவர் தற்போது கொடைக்கானலில் தங்கியுள்ளார். இவர், தனது காதலர் தேஸ்மந்த் கொட்டிகோவைத் திருமணம் செய்ய இருக்கின்றனர். இதற்காக கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மாதம் 12–ஆம் தேதி மனு அளித்தார். ஆனால் இவருடைய திருமணத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏற்கனவே இந்து மக்கள் கட்சி, உழவர் உழைப்பாளர் சங்கம் சார்பில் சார் பதிவாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கொடைக்கானலில் உள்ள பாரதி அண்ணாநகர், பாலமலை, சாம்பக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஆதிவாசி மக்கள் கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவகத்தில் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், “கடந்த 2007–ஆம் ஆண்டில் இருந்து மாவோயிஸ்டு நடமாட்டத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளோம். தற்போது இரோம் சர்மிளா எங்களுக்காக போராடுவேன் என்று கூறிக் கொடைக்கானலில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். இவர் போராடுவதற்கு ஆதிவாசிகளைப் பயன்படுத்த வேண்டாம்.

இவர் போராட வேண்டும் என்று விரும்பினால் அவரது மாநிலமான மணிப்பூருக்குச் சென்று போராடட்டும். இங்கே இவருக்கு திருமணம் நடைப்பெற்றால் கொடைக்கானல் கலவர பூமியாகும். ஆகவே அவருக்கு நடக்கவிருக்கும் திருமணத்தை நிறுத்தி, கொடைக்கானலை விட்டு அவரை வெளியேற்ற வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.

“ஆதிவாசிகளுக்காக போராடுவேன்” என்று இரோம் சர்மிளா கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மக்களே மனு கொடுத்திருப்பதற்கு பின்புலத்தில் ஏதாவது தூண்டுதலா அல்லது வலுகட்டாயமாக மனு கொடுக்க வைக்கப்பட்டுள்ளார்களா? என்ற கேள்வி இரோம் சர்மிளாவைப் பற்றித் தெரிந்த யாருக்கும் எழும்பும்.