மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்படும் இரோம் சர்மிளா, அங்குள்ள ஆயுதப்படை சிறப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தை, கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி தொடங்கி, கடந்த 2016 ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடத்தினார்.

பின்னர், தனது போராட்டத்தை முடித்து கொண்ட இரோம் சர்மிளா, அரசியல் கட்சியை துவங்கினார். அதைதொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இதையொட்டி, மாநிலம் முழுவதும் மக்களை உற்சாகமாக சந்தித்து வாக்குகளை சேகரித்தார்.

இந்த தேர்தலில் இரோம் சர்மிளா வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவில், மிகவும் குறைந்த வாக்குகளே பெற்றதால், அவர் தோல்வியை தழுவினார். இதையடுத்து, பொது வாழ்வில் இருந்து விலகி, ஓய்வெடுத்து வரும் இரோம் சர்மிளாவுக்கு தற்பாது 45 வயதாகிறது.

இரோம் சர்மிளா, இங்கிலாந்தில் வசிக்கும் தமது நீண்ட கால நண்பரான டெஸ்மாண்ட் கவுடின்ஹோவை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியானது. 

இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளா திருமணப்பதிவு செய்ய கொடைக்கானல் சார்பதிவாளரிடம் கடந்த மாதம் விண்ணப்பம் செய்தார்.டெஸ்மாண்ட் கவுடின்ஹோவை திருமணம் செய்வதற்காக விண்ணப்பத்தை இரோம் ஷர்மிளா தாக்கல் செய்தார்.

சார் பதிவாளர் அலுவலகத்தில், 30 நாட்களுக்கு பிறகு திருமணம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் கொடைக்கானலில் திட்டமிட்டபடி இரோம் சர்மிளாவுக்கு இன்று திருமணம் நடைபெறும் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.