சினிமாவில் இருந்து மக்கள் நல்லது எதையும் கற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ... மோசமான விஷயங்கள் மட்டும் உடனே பரவி விடும். கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் ஒரு காட்சி வரும். அந்தக் கற்பனைக் காட்சியை நிஜத்தில் உண்மையாக்கி, இப்போது மாட்டிக் கொண்டுள்ளார் ஓர் உயரதிகாரி.

சென்னையில் நடந்த ஐஏஎஸ்., மெயின் தேர்வில், காதில் ஒளித்து வைத்திருந்த ப்ளூடூத் கருவி மூலம் ஹைதரபாத்தில் இருந்த தன் மனைவியிடம் இருந்து பதில்களைப் பெற்று தேர்வு எழுதினார் ஐபிஎஸ் அதிகாரி 'சபீர் கரீம்’ என்ற குற்றச்சாட்டின் பேரில், அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, அவர் தனக்குத் தானே ஏதோ பேசிக் கொண்டிருக்க, அதனை கவனித்த கண்காணிப்பாளர் அவரை சோதனையிட்டு, உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் பெரும் பிரச்னையைக் கிளப்பியது ‘நீட்’ தேர்வு. இதனை யாரும் மறந்திருக்க முடியாது. நீட் தேர்வின் போது பல கட்டுப்பாடுகள், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விதிக்கப்பட்டன. முழுக்கை சட்டை அணியக் கூடாது, உலோகப் பொருள்கள் வைத்திருக்கக் கூடாது என்றெல்லாம் எத்தனை கட்டுப்பாடுகள்...?! அப்போது அதனை அறியாமல் தேர்வு எழுதச் சென்ற பிள்ளைகளின் முழுக்கைச் சட்டைக் கைகள் எல்லாம் கத்தரிக்கப்பட்டன. இளம்பெண்களை சோதனை என்ற பெயரில் துன்புறுத்தியதும் நமக்குத் தெரியும். 

ஆனால்... இதே போன்ற கட்டுப்பாடுகள் மட்டும் ‘யுபிஎஸ்சி’ நடத்துகின்ற, நாட்டின் மிக முக்கியப் பொறுப்புகளை வகிக்கக் கூடிய அதிகாரிகளைத் தோற்றுவிக்கும் இந்தத் தேர்வுகளுக்கு இருக்க வேண்டுமா கூடாதா?  கடினமான சோதனைகள் நிச்சயம் இருந்திருக்க வேண்டுமல்லவா?  ஆனால், இதை எல்லாம் கடந்து, அந்த அதிகாரி சபீர் கரீம் எப்படி ப்ளூடூத் கருவியை எடுத்துச் சென்றிருக்க முடியும்..? எல்லோர் மனத்திலும் எழும் கேள்விதான்..!  காரணம், அவர் 2014ல் ஐபிஎஸ் தேர்ச்சியடைந்து, தற்போது நெல்லை மாவட்ட காவல்துறையில் உயர் பொறுப்பில் இருக்கிறார். அவ்வளவு ‘பெரீய்ய அதிகாரி’யை சோதிப்பதில் சிக்கல்கள் இருந்ததா? அல்லது அவரை சோதிக்காமல் இருப்பதுதான் நமக்கு நன்மை என்று யாரேனும் உள்ளே விட்டுவிட்டார்களா? இவை போன்ற கேள்விகள் மட்டுமல்ல, இதே போன்ற தேர்வில் இவர் ஐபிஎஸ் எப்படி கடந்து வந்திருப்பார் என்ற சந்தேகத்தையும் இப்போது எழுப்பி வருகின்றனர் சமூக வலைத்தளங்களில்!  

இவர் மீது சாட்டப்பட்ட குற்றத்துக்காக இவரும் இவர் மனைவியும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருடைய ஐபிஎஸ் நிலை என்னவாகும்!?

அவர் மீது, குற்றவியல் நெறிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப் படலாம்.  துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதாகச் சொல்லியிருக்கிறார்கள். எனவே தண்டனை விதிக்கப்படலாம் அல்லது வேலை போகலாம்.

அல்லது, யுபிஎஸ்ஸி நடத்தும் எந்தவிதமான தேர்வுக்கும் அல்லது செலக்‌ஷனுக்கும் நிரந்தரமாகவோ அல்லது குறிப்பிட்ட காலத்துக்கோ அனுமதி மறுக்கப் படலாம். அவ்வாறென்றால், பணி உயர்வுக்கு வாய்ப்பு மறுக்கப்படலாம். 

முன்னர் இவர் ஐ.ஏ.எஸ்ஸில் 112வது ரேங்க் வாங்கியிருந்தாராம். ஆனால், சினிமாவைப் பார்த்து ஐபிஎஸ் ஆபீசரா வர ஆசைப்பட்டதால், ஐபிஎஸ் தேர்வு எழுதினாராம்.  ஆனால், அண்மையில் ஏதோ விபத்தில் உடல் தகுதி  இழந்ததால், மீண்டும் ஐ.ஏ.எஸ் ஆக முயற்சி செய்தார் என்று ஒரு செய்தி உலவுகிறது.  ஆனால் இப்போது,  இவர் முன்பு எழுதிய தேர்வுகளிலும் ஏதாவது கோல்மால் செய்திருக்கிறாரா என்ற ரீதியில்  விசாரணை செய்துவருவதாகக் கூறப்படுகிறது. 

எல்லாம் சரி... நீட் எழுதி டாக்டரா சேவை செய்ய நினைக்கிறவங்களுக்கு என்ன விதமான கட்டுப்பாடுகளும் அளவுகோல்களும் வெச்சிருக்கீங்களோ... அதே அளவுகோலை இவரிடமும் காட்டியிருக்க வேண்டாமா..? என்றே கருத்துகளை விதைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.