சென்னையில் நடக்க உள்ள ஐபிஎல் போட்டியை, திருவனந்தபுரத்துக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக வந்த தகவல் உண்மையில்லை என்று தமிழக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் செல்ல வேண்டாம் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த்ன் அண்மையில் தெரிவித்திருந்தார். ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் என்றும், ரசிகர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இதனிடையே, ஐ.பி.எல். போட்டி நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் தொடங்கியது. சென்னையில் வரும் 10 ஆம் தேதி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. 

இந்த நிலையில் காவிரிக்காக எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இடமாற்ற தமிழக, கேரள கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகின. ஆனாலும், இந்த செய்தியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை ஐபிஎல்-ஐ மாற்ற எந்த திட்டமும் இல்லை என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கூறியுள்ளது. இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மறுப்பு தெரிவித்துள்ளது.