மொபைல் ஷோரும் ஒன்றில் இருந்து ஐபோன் ஒன்றை திருடிச் செல்ல முயன்ற நபரை ஊழியர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் சென்னை, திநகரில் நடந்துள்ளது. 

சென்னை, தி.நகர், பாண்டிபஜாரில் மொபைல் ஷோரும் ஒன்று இயங்கி வருகிறது. இன்று இந்த மொபைல் ஷோரூமில், மொபைல் வாங்குவதுபோல் ஒரு நபர் வந்துள்ளார். 

மொபைல்களை பார்த்துக் கொண்டிருந்த அந்த நபர், திடீரென்று ஐபோன் ஒன்றை திருடிக் கொண்டு ஓட முயன்றார். இதை அறிந்த ஊழியர்கள், அந்த நபரை பிடிக்க முயன்றனர்.

ஆனால், மொபைலை எடுத்துக் கொண்டு ஓடிய அந்த நபர், திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, ஊழியர்களைத் தாக்கினார்.

இதில், ஊழியர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. ஆனாலும், அந்த நபரை, ஊழியர்கள், பிடித்து, பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அரிவாளால் வெட்டப்பட்ட ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது