International Tea Day White Black or Green Why you should start your day with a steaming cup of tea
வீடாகட்டும், அலுவலகம் ஆகட்டும்... டீ என்பது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா? ஒரு கப் டீ, வாழ்க்கையை உற்சாகம் ஆக்கி விடும் என்றால் நம்ப முடியுமா?
போர் அடிக்கும் வேலை, மனச் சோர்வு அளிக்கும் நேரம் என்றால், மூளைக்கு புத்துணர்சியும் உடலுக்கு சுறுசுறுப்பையும் அளிக்க வல்லது ஒரு கப் டீ தான்! வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு ஒரு கப் டீ கூட கொடுக்காமல் வெளியில் அனுப்ப முடியுமா? யாராயிருந்தாலும், வாங்க.. வாங்க.. டீ குடிக்கிறீங்களா? என்று கேட்பது ஒரு விருந்தோம்பலின் ஓர் அம்சம் ஆகிவிட்டதே!
அலுவலகத்தில் யாருடனும் மன உரசல் இருந்தால்... ஏதேனும் சிக்கல்களால் ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால்... உடனே சொல்வது.. வாங்க அப்டியே போய் ஒரு டீ குடிச்சிட்டு வரலாம் என்று வெளியில் சென்று, கேண்டீனிலோ, கடையிலோ நின்று கொண்டு, அந்த ஒரு க்ளாஸ் டீயையும் சிறிது சிறிதாக உள்ளே அனுப்பிக் கொண்டே, மனசினுள் உள்ளே இருந்துவந்த கோப தாபங்களை, மனச்சிக்கல்களை எல்லாம் வெளியில் அவிழ்த்து விட்டு... அப்படியெ சமாதானம் பேசி சமரச உடன்படிக்கைக்கு வரச் செய்யும் வித்தையை எத்தனை பேர் அனுபவித்திருப்போம்..!
மழை நேரமா..? சில்லிடும் குளிர் நேரமா..? சூடா ஒரு கப் டீ..! இதம் தரும்! இனிமை கூட்டும்!
சரி இது வெறும் புத்துணர்ச்சிக்கும் இதமான சூட்டுக்கும்தானா? இன்னும் கோல்ட் டீ எனும் குளிர் டீயெல்லாம் கூட இருக்கிறதே! அப்படி என்றால் அந்த டீயில் என்னதான் இருக்கிறது!
புத்துணர்ச்சியூட்டும் பல காரணிகள் மட்டுமல்ல, மருத்துவ குணமும் கொண்டது டீ என்கிறார்கள். டீ-க்கு தேயிலை என்று தமிழில் பெயர் சூட்டியிருக்கிறார்கள். இந்தத் தேயிலையில் இருக்கும் பாலிபினால் என்ற கலவை சுற்றுச்சூழல் மாசுபாட்டால் வரக்கூடிய புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டதாம்.
மசாலா டீ, கிரீன் டீ, பிளாக் டீ, லெமன் டீ, இஞ்சி டீ, ஏலக்காய் டீ, சுக்கு டீ, ப்ளாங் டீ, பால் டீ இவற்றோடு இப்போது மூலிகை டீயும் சேர்ந்து கொண்டு, டீயில் தான் எத்தனை எத்தனை வகை என்று நம்மை குடிக்கத் தூண்டுகிறது.
ஆம்... இன்று சர்வதேச டீ தினம்! இந்த தினத்தில் டீ குறித்த புராணம் இல்லாமல் இருந்தால் எப்படி?
செம தலைவலி... நல்லா ஸ்ட்ராங்கா ஒரு டீ குடிச்சாதான் சரியாகும்... இப்படிச் சொல்பவர்கள் பலர். ஒற்றை தலைவலி, தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகளுக்கு அதிக திடமான பிளாக் டீ நல்ல மருந்து. சிறுநீரகக் கோளாறு, குறைந்த ரத்த அழுத்தம், மன அழுத்தம், இதய பாதுகாப்பு என பல நன்மைகள் டீயில் உண்டு.
நான் டயட்ல இருக்கேன் என்று சொல்லிக் கொண்டு உடல் எடையைக் குறைக்க போராடுகிறீர்கள் என்றால், டீ அந்த வேலையை உங்களுக்காகச் செய்து கொடுக்கும். டீ, குறைந்தது 3% வரை உங்கள் உடலின் கலோரியைக் குறைக்குமாம். அதாவது எந்தவித உடற்பயிற்சியும் செய்யாமல் 3.5 கிலோ வரை உடல் எடையை உங்களால் குறைக்க முடியுமாம்!
டீயில் அதிகம் சர்க்கரை கலந்து குடிக்கக் கூடாது என்பார்கள். பற்களின் மேற்பரப்பில் உருவாகும் படலம் போன்ற பாக்டீரியாக்களில் இருந்து பற்களைப் பாதுகாக்கும். மேலும், வெண்மையான பற்களை நமக்குத் தருவது, சர்க்கரை இல்லாமல் குடிக்கும் டீ.
இருப்பினும், டீ குடிப்பதைக் கூட அளவாகக் குடிக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சி ஒருநாளுக்கு அதிகம் குடிக்கக் கூடாது. காஃபியை விட தேயிலையில் உள்ள காஃபீன் எனும் நஞ்சு 50 சதம் தான் என்றாலும், அளவாகக் குடித்து பலன் பெறலாம். ஆக, இன்று உலக தேயிலை தின நல் வாழ்த்துகள் என்று தெரிவித்துக் கொள்வோம்.
நாம் சுறுசுறுப்பாக இயங்க,
இரவு, பகல் பாராது வெயில், மழை, பனி என எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் பலருக்கும் ஊக்கமளித்து, உற்சாகம் தந்து, சுறுசுறுப்பைத் தரக்கூடிய பானம் "தேனீர்".
ஆனால் அவ்வாறான சுறுசுறுப்பைத் தரக்கூடிய உற்சாக பானமான தேனீரை தயாரிக்கப் பயன்படுத்தபடும் தேயிலையை பறித்து, பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் படும் இன்னல்கள், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களுக்கு மறுக்கப்பட்டு வரும் உழைப்பிற்கேற்ற ஊதியம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டி உருவாக்கப்பட்ட நாள்தான் "உலக தேயிலை தினம்" - டிசம்பர் - 15 இன்று!
