சர்வதேச புத்தகக் கண்காட்சி முதல் எழுத்தாளர்களுக்கு வீடு வரை.. தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றிய முதல்வர் ஸ்டாலின்
எழுத்தாளர்களுக்கு வீடு, தகைசால் தமிழர் விருது முதல் கலைஞர் நூலகம், சர்வதேச புத்தகக் கண்காட்சி வரை எண்ணற்ற திட்டங்களை தமிழ் மொழி வளர்ச்சிக்கு செயல்படுத்தி சாதனை படைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான திட்டங்களை இந்த பதிவில் காண்போம்.
தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்கள் :
தமிழ் இலக்கியத்திற்கு சிறந்த படைப்புகளைத் தரும் எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது மற்றும் கனவு இல்லம் கட்டித்தரப்படும் என்ற அரசின் அறிவிப்பு, எழுத்தாளர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல, தமிழ் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருது வழங்கப்பட்டது. இப்படியான திட்டங்கள் மூலம் தமிழின் இருப்பை ஆழமாகவும் அழுத்தமாகவும் அனைவருக்கும் உணர்த்தியது தமிழ்நாடு அரசு.
இலக்கிய மாமணி என்ற விருது மூலம் 5 லட்சம் ரூபாயை முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்து, அதே வேகத்தில் வழங்கியுள்ளார். சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடுகளை வழங்கியிருக்கிறார். வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமிழ் கற்க 'தமிழ் பரப்புரைக் கழகத்தை' நிறுவி அதற்கான பாடத்திட்டங்களை வெளியிட்டுள்ளார். மறைந்த தமிழ் அறிஞர்களுக்கு அரசு மரியாதையை ஏற்படுத்தி தந்துள்ளார்.
கலைஞர் செம்மொழி விருது :
இதுவரை தமிழ்நாட்டில் இந்த வாய்ப்பை யாரும் பெற்றதில்லை. முதன்முறையாக எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு இந்த மரியாதையை வழங்க உத்தரவிட்டார். பாரதி நூல்களுக்கு செம்பதிப்பு, 13 பேருக்கு கலைஞர் செம்மொழி விருதுகளை அறிவித்து அதை உடனடியாக நிறைவேற்றினார். சங்க இலக்கிய நூல்களை அரசு பதிப்பாக வெளியிடும் திட்டம் என பல தமிழ் வளச்சிக்கான திட்டங்களை தொடர்ந்து அறிவித்தும், அதே வேகத்தில் செயல்படுத்தியும் வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
கனவு இல்லம் திட்டம் :
தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களின் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்ற கனவு இல்லத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக 2022- 2023-ம் ஆண்டில் ஜி.திலகவதி, பொன். கோதண்டராமன், சு.வெங்கடேசன், ப.மருதநாயகம், மறைமலை இலக்குவனார், மருத்துவர் முனைவர் இரா. கலைக்கோவன், எஸ்.ராமகிருஷ்ணன், கா.ராஜன், ஆர்.என்.ஜோ.டி.குருஸ், சி.கல்யாணசுந்தரம் ( வண்ணதாசன்) ஆகிய 10 தமிழ் எழுத்தாளர்களுக்கு, அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விடும்பும் மாவட்டத்தில் வீடுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல தகைசால் தமிழர் விருது ஆர்.நல்லகண்ணுவுக்கு வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.
இதையும் படிங்க.. TNPSC : போட்டி தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி சொன்ன குட் நியூஸ்.. குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள்
கலைஞர் நினைவு நூலகம் :
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 97ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2.7 ஏக்கர் நிலத்தில் 2 லட்சத்து 179 சதுர அடி கட்டட பரப்பளவில் 8 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், கட்டடத்திற்கு 99 கோடி ரூபாய், புத்தகம் வாங்க 10 கோடி ரூபாய், கணினி வாங்க 5 கோடி ரூபாய் என மொத்தம் 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம்; தரை தளத்தில் வரவேற்பு அரங்கம், தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாட்டுக் கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு ஆகியவையும், முதல் தளம் முதல் ஆறாம் தளம் வரை இரண்டு லட்சத்திற்கும் மேலான நூல்களுக்கான பிரிவுகளும் அமைய உள்ளது.
புத்தகக் கண்காட்சி :
பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு திட்டப் பணிகளை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. அரசு பள்ளி மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த பள்ளி நூலக செயல்பாடுகளில் புதிய மாற்றங்களை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது. சென்னை, மதுரை உள்ளிட்ட பெரிய நகரங்களில் நடத்தப்பட்டு வந்த புத்தகக் கண்காட்சி இப்போது அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது.
அந்தந்த மாவட்ட நிர்வாகமும் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்களும் இணைந்து இந்த புத்தகக் கண்காட்சியை நடத்துகின்றன. சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சியை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்தி வரும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்துடன் பள்ளிக் கல்வித்துறை இணைந்து தமிழகத்தில் முதன்முறையாக சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சியை 2023 ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளது.
பொருநை அருங்காட்சியகம் :
கீழடியில் ஏறத்தாழ 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்கள் கிடைத்து உள்ளன. இந்தப் பொருட்களைக் கொண்டு கீழடியில் அருங்காட்சியகம் திறப்பதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. இதுமட்டுமின்றி, நெல்லை நகரில் ரூபாய் 15 கோடியில் நவீன வசதிகள் கொண்ட பொருநை அருங்காட்சியகம் அமைக்கவும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். அகழாய்வு பணிகளுக்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே ரூபாய் 5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இதை சட்டசபையில் அறிவித்தார்.
இத்துடன், கேரள மாநிலம் பட்டணம், ஆந்திராவில் வேங்கி, கர்நாடகாவில் தலைக்காடு, ஒடிசாவில் பாலூர் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து இருந்தார். இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பிலிருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும் என்று பேசி இருந்தார். இத்துடன் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி உலகெங்கும் பயணிப்போம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..ஏக்நாத் ஷிண்டே முதல் ரிஷி சுனக் வரை.. 2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட அரசியல்வாதிகள்!