திருநெல்வேலி

தாமிரபரணியைப் பாதுகாக்க வரும் 24-ஆம் தேதி நடக்க இருக்கும் எழுச்சிப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் திரண்டு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன் அழைப்பு விடுத்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.ஜி.பாஸ்கரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 120 கிலோமீட்டர் தூரம் பாய்ந்தோடும் தாமிரவருணி 86 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை உயிர்ப்பிக்கிறது.

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் என 4 மாவட்டங்களில் 70 லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்கிறது.

மானூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 400 வழியோர கிராமங்களுக்கும், நகரங்களுக்கும், கடையநல்லூர், புளியங்குடி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் 84 வழியோர கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

ஆனால், பருவமழை பொய்த்து தாமிரவருணி இருந்த தடம் தெரியாமல் சுருங்கிவிட்டது.

இந்தச் சூழலில் தனியார் குளிர்பான ஆலைகளுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் தாமிரவருணியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வழங்குவது கண்டிக்கத்தக்கது.

தண்ணீர் தனியார் மயம் என்ற நிபந்தனைக்குள்படும் நாடுகளுக்கு மட்டுமே கடன் என உலக வங்கி நிர்ப்பந்தம் செய்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் தண்ணீருக்கான தனியார் முதலீடு 620 விழுக்காடு உயர வேண்டும் என்றும் உலக வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதன் காரணமாக நமது நாட்டின் நீராதாரங்கள் அனைத்தும் சுரண்டப்படுகின்றன.

இது ஒருபுறமிருக்க, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 2500 குளங்களும் தூர்ந்து கிடக்கின்றன.

தாமிரவருணியில் உள்ள 8 அணைக்கட்டுகளும், 11 கால்வாய்களும் மராமத்து செய்யப்படாமல் ஓடைகளாக ஒடுங்கி கிடக்கின்றன.

இந்தியர்களின் உணவுப் பழக்கம் மற்றும் கழிவறை பழக்கங்களைக் கொண்டு சராசரி ஒருவருக்கு ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 150 லிட்டர் நீர் தேவை என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், 20 லிட்டருக்கே அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே, தாமிரவருணியை மீட்டெடுக்கவும், நீராதாரங்களைப் பாதுகாக்கவும் வரும் 24-ஆம் தேதி தாமிரவருணி நதிக்கரையில் அனைவரும் சங்கமிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

இந்த எழுச்சிப் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் திரண்டு வர வேண்டும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.