நாகப்பட்டினம் 

நாகப்பட்டினத்தில், இழப்பீடு தொகை வழங்கப்படாமல் விடுபட்ட 340 விவசாயிகளுக்கு ஏப்ரல் மாதத்துக்குள் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் காப்பீடு அலுவலர் உறுதியளித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தில் உள்ளது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி. இந்த வங்கி கடந்த 2016 - 17-ஆம் ஆண்டில் 340 விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்காமல் விடுவித்திருந்தது. 

இதுகுறித்து விவசாயிகள் பலமுறை ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இந்த நிலையில், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் ஆனந்தகுமார், ரவிசுந்தரம், சேகர் மற்றும் கூட்டுறவு வங்கிச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சமீபத்தில் சென்னையில் காப்பீடு நிறுவனத்துக்குச் சென்று, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கான காப்பீடு அலுவலர் கணேசனை சந்தித்துப் பேசினர்.

அப்போது, "விடுபட்ட விவசாயிகளுக்கான காப்பீடு இழப்பீட்டுத் தொகை ஏப்ரல் இறுதிக்குள் விநியோகிக்கப்படும்" என்று அவர் உறுதியளித்தார். 

ஒருவேளை ஏப்ரல் இறுதிக்குள்ளும் விநியோகிக்காவிட்டால் அடுத்த கட்டமாக தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்துவிட்டு விவசாயச் சங்கப் பிரதிநிதி ரவிசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.