Asianet News TamilAsianet News Tamil

முல்லைப்பெரியாற்றில் கழிவுநீர் கலக்கப்படுவது குறித்து ஆய்வு சமர்ப்பிக்க வேண்டும் – ஆட்சியருக்கு அமைச்சர் உத்தரவு…

Inspectorate should submit a report on the mixing of waste in Mullaperiyar.
inspectorate should-submit-a-report-on-the-mixing-of-wa
Author
First Published Apr 21, 2017, 10:33 AM IST


தேனி

முல்லைப்பெரியாற்றில் கழிவுநீர் கலப்பதால் மக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் இருக்கிறது என்று புகார் எழுந்ததால் அதுகுறித்து ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவிட்டார்.

தேனி மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலரும், தேனி மாவட்டத்திற்கான ஆய்வு அலுவலருமான கார்த்திக், மாவட்ட ஆட்சியர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய சிலர், “முல்லைப்பெரியாற்றில் கழிவுநீர் கலப்பதாகவும், அதனால் மக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும்” தெரிவித்தனர்.

இதனையடுத்து மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் ஆற்றில் சாக்கடை கழிவுநீர் கலக்கப்படுகிறது? அந்த பகுதிகளில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன? என்று கம்பம், கூடலூர், சின்னமனூர், தேனி ஆகிய நகராட்சி ஆணையாளர்களிடம் அரசு செயலர் கார்த்திக் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘கழிவுநீர் கலப்பதாக கூறப்படும் இடங்களில், நோய் பரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் முல்லைப்பெரியாற்றில் கழிவுநீர் கலப்பதாக கூறப்படும் இடங்களில் தண்ணீர் மாதிரி எடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வு அறிக்கையை துரிதமாக அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்’ என்று கூறினார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தை ஒப்பிடுகையில் தேனி மாவட்டத்தில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு 80 சதவீத மக்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

குடிநீர் திட்டப் பணிகளுக்கு நிதி ஒரு பொருட்டாக இருக்காது. எவ்வளவு நிதி தேவைப்பட்டாலும் அரசு வழங்க தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மக்களை போன்று வனப்பகுதிகளில் உள்ள விலங்குகளின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

முல்லைப்பெரியாற்றில் கழிவுநீர் கலப்பதாக கூறப்படுவது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் கழிவுநீர் கலப்பதாக கூறப்படும் இடங்களில் தண்ணீர் மாதிரி எடுத்து ஆய்வு செய்து அந்த ஆய்வு அறிக்கையை அரசுக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைக்க வேண்டும்.

அடிகுழாய்கள், மின் மோட்டார்கள் பழுது ஏற்பட்டால் உள்ளாட்சி அமைப்புகள் உடனே அதனை சரி செய்ய வேண்டும். நீர்நிலைகளை தூர்வார அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது” என்று அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) சச்சின்போஸ்லே, கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன், பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ. கதிர்காமு மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios