Inspector who gave cake for Rowdy! What is the action of the police department?
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ரவுடிக்கு, காவல் ஆய்வாளர் ஒருவர் கேக் கூட்டி, பிறந்தநாள் வாழ்த்துக்கூறிய புகைப்படம் ஒன்று தற்போது வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சம்பந்தப்பட்ட ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் கருணாகரன். மதுரை மாவட்டத்தை சேர்ந்தவரான கருணாகரன், கடந்த ஒரு வருடமாக கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அங்குள்ள காவலர் குடியிருப்பில் அவர் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், ஆய்வாளர் கருணாகரன், இரண்டு நாட்களுக்கு முன்பு தனது அறைக்கு சில ரவுடிகளை அழைத்து வந்துள்ளார். அங்கு வந்த ரவுடி சுசீந்திரன் மீது கொலை வழக்கு உள்ளது.
ரவுடி சுசீந்திரனின் பிறந்தநாள் அன்று என்பதால், ஆய்வாளர் கருணாகரன் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ரவுடி சுசீந்திரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஆய்வாளர் கருணாகரன், கேக் வெட்டி ஊட்டி விட்டும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
ரவுடி சுசீந்திரனுக்கு, ஆய்வாளர் கேக் ஊட்டிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதை அறிந்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் சங்கர், கருணாகரனை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஆய்வாளர் கருணாகானுடன் இருந்த ரவுடிகள் யார் யார். அவர்கள் மீது எத்தனை வழக்குகள் உள்ளன என்பது குறித்து விசாரிக்கவும் காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
ரவுடி சுசீந்திரன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தண்டனைப் பெற்றவர் எனக் கூறப்படுகிறது. பொது இடத்தில் சிறுவன் ஒருவனைத் தாக்கியது; மக்கள் உரிமைக்காக போராடுபவர்களைத் தாக்குவது என இவர் மீது பொதுமக்கள் மத்தியில் பல புகார்கள் உள்ளன.

கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ள ரவுடி ஒருவருக்கு காவல் ஆய்வாளர் ஒருவர் கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்துக் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
