Asianet News TamilAsianet News Tamil

“டிஎஸ்பி ஆகும் நேரத்தில் கம்பி எண்ணும் நிலை” - மின்வாரிய அதிகாரியிடம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது

inspector arrested-for-accepting-bribe
Author
First Published Dec 2, 2016, 10:52 AM IST


வேளச்சேரியை சேர்ந்தவர் மோகன்ராஜ். மின்வாரிய இளநிலை பொறியாளராக வேலை பார்க்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மோகன்ராஜ், திருக்கழுக்குன்றம் அருகே கூவத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் வேலை செய்தார். அப்போது, இவர் மீது புதிதாக கட்டப்படும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் முறைகேடாக 100க்கு மேற்பட்ட மின் இணைப்புகளை வழங்கியதாக புகார் எழுந்தது.

அதன்பிறகு மோகன்ராஜ், வேளச்சேரி மின்வாரிய அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கூவத்தூரில் மின்வாரிய அலுவலகத்தில் செண்பகராஜ் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் மின்வாரிய வேலைகளை செய்துள்ளார். அவருக்கு, மின்வாரிய துறை பணம் கொடுக்க வேண்டி இருந்தது. அதற்கு மோகன்ராஜ் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால், அவர் மீது ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்ததால், ஒப்பந்ததாரருக்கு, பணம் கொடுப்பதற்கான ஒப்புதல் அளிக்காமல் பணியிடமாற்றம் பெற்று சென்றார்.

மோகன்ராஜ் மீது துறைரீதியாக புகார்கள் இருப்பது செண்பகராஜிக்கு தெரிந்தது. கூவத்தூர் எஸ்ஐயாக இருந்த குமரன் என்பவருடன், செண்பகராஜிக்கு பழக்கம் ஏற்பட்டது. தற்போது குமரன், கல்பாக்கம் இன்ஸ்பெக்டராக உள்ளார்.

அவரை சந்தித்த செண்பகராஜ், தனக்கு மின்வாரியத்தில் பணம் வரவேண்டியுள்ளது. அப்போது இருந்த மோகன்ராஜ், ஒப்புதல் அளிக்கவில்லை. அவர் மீது துறைரீதியான குற்றச்சாட்டுகள் உள்ளது. அவரை மிரட்டி பணம் பறிக்கலாம் என கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து செண்பகராஜ், சில நாட்களுக்கு முன் மோகன்ராஜிக்கு போன் செய்துள்ளார். ‘‘உங்கள் மீது முறைகேடான மின் இணைப்பு கொடுத்தது சம்பந்தமாக, விஜிலென்ஸ் விசாரணை நடக்கிறது. அதில், நீங்கள் சிக்கி உள்ளதால், உங்கள் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் குமரன், எனக்கு நன்கு பழக்கமானவர். அவரை கவனித்தால் வழக்கில் இருந்து காப்பாற்றுவார்’’ என கூறியுள்ளார்.

அதேநேரத்தில் இன்ஸ்பெக்டர் குமரனும், மோகன்ராஜிக்கு போன் செய்து, மிரட்டல் விடும் வகையில் பேசி செண்பகராஜிடம் ரூ.3 லட்சம் கொடுத்து அனுப்பும்படி கூறியுள்ளார். அவர்கள் 2 பேரும் பேசுவதை கேட்ட மோகன்ராஜ் அதிர்ச்சியடைந்தார்.

இன்ஸ்பெக்டர் குமரன், மோகன்ராஜிடம் செல்போனில் பேசும்போது வாக்கி டாக்கி சத்தம் கேட்டுள்ளது. விஜிலென்ஸ் போலீசார், வாக்கி டாக்கி பயன்படுத்துவது இல்லை. ஆனால், அவர் பேசும்போது சத்தம் கேட்டதால், அவருக்கு சந்தேகம் எழுந்தது.

இதுபற்றி சென்னையில் உள்ள தனது நண்பர்கள் மூலம் விஜிலென்ஸ் பிரிவில் விசாரித்தார். அதில், விஜிலென்ஸ் பிரிவில் அதுபோன்ற விசாரணை நடக்கவில்லை என்றும், குமரன் என்ற பெயரில் இன்ஸ்பெக்டர் யாரும் இல்லை என்றும் தெரிந்தது.

இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில், மோகன்ராஜ் கடந்த 29ம் தேதி புகார் செய்தார். எஸ்பியின் ஆலோசனைபடி, மோகன்ராஜ், குமரனை தொடர்பு கொண்டு ரூ.1 லட்சம் கொடுப்பதாக கூறினார். முன்பணமாக ரூ.20 ஆயிரம் தர ஒப்புக்கொண்டார். அதற்கு இன்ஸ்பெக்டர் குமரனும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதன்படி கூடுதல் எஸ்பி சண்முகம், மாறுவேடத்தில் மோகன்ராஜுடன், அவரது நண்பர்போல, நேற்று மதியம் கல்பாக்கம் காவல் நிலையம் சென்றார். வெளியே லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி குமரகுருபரன், இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ராமச்சந்திரமூர்த்தி ஆகியோர் மறைந்திருந்தனர்.

காவல் நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் குமரனிடம், 2 பேரும் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தனர். மீதி பணம் கொடுத்தவுடன், வழக்கில் இருந்து விடுவிக்கிறேன் என அவர் கூறினார். உடனே  கூடுதல் எஸ்பி சண்முகம், அவரை கையும் களவுமாக கைது செய்தார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் குமரன் கொடுத்த தகவலின்படி, ஒப்பந்ததாரர் செண்பகராஜை, சீக்கனாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் கைது செய்தனர்.

மோகன்ராஜிடம், இன்ஸ்பெக்டர் குமரன், பணத்தை வாங்கியதும், ஏஎஸ்பி சண்முகம் தனது அடையாள அட்டையை காண்பித்து, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி என கூறியதும், காவல் நிலையத்தில் இருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே, வெளியே மாறு வேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடியாக உள்ளே நுழைந்து, அங்கிருந்த அனைத்து போலீசார், காவலர்கள், சிஐடி பிரிவினர் ஆகியோரின் செல்போன்களை பறிமுதல் செய்தனர். ஆனால், அவரை எதற்காக கைது செய்தனர் என 6 மணி நேரத்திற்கு பிறகே அனைவருக்கும் தெரியவந்தது.

கைதான இன்ஸ்பெக்டர் குமரனின் பெயர், டிஎஸ்பி பதவி உயர்வுக்கான பட்டியலில் உள்ளது. இந்த மாத கடைசியில் அவர், வேறு சரகத்துக்கு பதவி உயர்வுடன் பணியிடமாற்றம் செய்யப்பட இருந்தார். இப்போது, அவரது பதவி உயர்வு கேள்விக்குறியாக மாறியுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios