தஞ்சாவூர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், அதை ஏற்க முடியாது என்று மத்திய அரசு கூறியது நயவஞ்சகமானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
தஞ்சை இரயில் நிலையம், பழைய பேருந்து நிலையம், கீழராஜவீதி - தெற்கு ராஜவீதி சந்திப்பு, கரந்தை போக்குவரத்துக்கழக பணிமனை, கரந்தை தமிழ்ச்சங்கம், பள்ளி அக்ரகாரம் கடைத்தெரு ஆகிய ஆறு இடங்களில் கொடியேற்று விழா நடந்தது.
இந்த விழாவிற்கு மதிமுக நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். துணைப் பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் உதயகுமார் ஆகியோர் இந்த விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.
இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு மதிமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதியில் எவ்வளவு வறட்சி நிலவி வருகிறது என்பதை நான் 1 மணி நேரம் நடந்து சென்ற போது பார்த்தேன். வழக்கமாக தண்ணீர் பெருக்கி ஓடும் வாய்க்கால் வெறும் மணலாக காட்சி அளிப்பதை பார்க்கும் போது மிகுந்த வேதனை ஏற்பட்டது.
விவசாயிகள் ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதைத்தான் நான் 3 ஆண்டுகளுக்கு முன்பு கூறினேன், பசியும், பட்டினியுமாக எத்தியோப்பியாவை போல நம்முடைய தஞ்சை டெல்டா பகுதி ஆக போகிறது என்று.
இதற்கு காரணம் கர்நாடகம் மேகதாது, ராசிமணல் பகுதியில் அணை கட்டுவதற்கு பணம் ஒதுக்கி, மூலப் பொருட்களை சேகரித்து வேலையை ஆரம்பிக்கப் போகிறது. இதன் பின்னர் ஒரு சொட்டு தண்ணீர் கூட மேட்டூர் அணைக்கு வராது. இதனால் டெல்டா பகுதி இன்னும் 50 ஆண்டுகளுக்குள் தமிழகத்திலேயே மிகுந்த வறண்ட பகுதியாக ஆகப்போகிறது.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆசிய கண்டத்துக்கே நெல் வழங்குகிற களஞ்சியமாக திகழ்ந்த நமது மண் பிச்சை பாத்திரமாக திகழப்போகிறது என நான் 2015-ம் ஆண்டு 1½ மாதம் ஊர், ஊராக சென்று மக்களை திரட்டினேன்,
மீத்தேன் திட்டம், ஷேல் எரிவாயு திட்டத்தை தடுத்து விட்டோம். இது தொடர்பான வழக்குகளில் நான் தொடர்ந்து வாதாடி வருகிறோன். காவிரி தண்ணீர் வராமல் போகிறது. இதற்கு என்ன செய்யப்போகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை. இதற்கு மத்திய அரசை கண்டிக்கிறேன்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், அதை ஏற்க முடியாது என்று மத்திய அரசு கூறி விட்டது. இது நயவஞ்சகமான நிலை.
முல்லைப்பெரியாறு அணையை இடிக்கும் முயற்சியில் தான் கேரள அரசு செயல்படுகிறது. ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளின் உயரத்தை அதிகப்படுத்த முயற்சி செய்கிறது.
சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். தஞ்சை மாவட்ட பகுதிகளில் இன்னும் அகற்றப்படவில்லை. சீமைக்கருவேல மரங்கள் நீலத்தடி நீரை முழுமையாக உறிஞ்சிக்கொள்கிறது. இதனை சிறிய மரங்களாக வளரும் போதே பிடுங்கி விட வேண்டும். இதனை வெட்டி விட்டால் மட்டும் போதாது. வேரோடு எடுக்க வேண்டும். இந்த பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இது விஷத்தன்மை வாய்ந்தது. இதனை அழிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அரசு மட்டும் இதனை செய்ய முடியாது.
அந்தந்த கிராம மக்கள், மாணவர்கள், நமது ஊரை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் நிலத்தடி நீர் அழிந்து விவசாயம் அழிவதை தடுக்கும் வகையில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். இன்று சல்லிக்கட்டு நடக்கிறது. நமது பாரம்பரியமான சல்லிக்கட்டை திரும்ப மாணவர்கள் கொண்டு வந்துள்ளனர். பாரம்பரியமான விளையாட்டை காப்பாற்றி உள்ளோம்.
அதே போல் பாரம்பரியமான நமது வாழ்வு அழியப்போகிறது. இதனை மாணவர்கள் தான் யோசிக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் ஊர்மக்கள், இளைஞர்கள் தான் இதனை எளிதாக செய்ய முடியும். மாணவர்கள், இளைஞர்கள் மக்களை திரட்டி சீமைக்கருவேலை மரங்களை அகற்ற ஒன்று திரள வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதிகள் வேலாயுதம், சாம்சன்ஸ், பிரான்சிஸ், சிவா, ராதாகிருஷ்ணன், நகர துணை செயலாளர்கள் குணசேகரன், குருமூர்த்தி, திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
