ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் 23ஆம் தேதி நடந்த வன்முறையில் அப்பாவி தலித்துகள், மீனவர்கள் தாக்குதல் நடந்துள்ளதாக அங்கு ஆய்வு நடத்திய உண்மை கண்டறியும் குழு சார்பில் பேரா. அ.மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில்,

கடந்த 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி இரவு வரை போராட்டம் அமைதியாக சென்றது.

22ஆம் தேதி இரவு அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

10,000 வரை போலீசார் இருப்பார்கள் என்று ஊடகங்களில் வெளியானது.

23ஆம் தேதி காலை முதல் போராட்டக்கார்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் என்ற செய்தி வெளியானது.

இது குறித்து உண்மைகளை கண்டறிய என் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் அதில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் அடக்கம்.

முதல் நாள் நாங்கள் அங்கு சென்ற போது காவல் அதிகாரிகள் எங்களை அனுமதிக்கவில்லை. போராட்டத்தின் போது தப்பி ஓடியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மீனவ குடும்பங்கள் தலித் குடும்பங்கள் தாக்கப்பட்டன.

குறிப்பாக இந்த குடும்பங்களை சேர்ந்த ஆண்கள், பெரிய அளவில் கைது செய்யபட்டனர்.

நடுக்குப்பம், அம்பேத்கர் பாலம், மீனாம்பாள் நகர் மீனவர்கள், தலித்துகள் கைது செய்யப்பட்டனர்.

23ஆம் தேதி காலை ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன் சமூக விரோதிகளால் கொளுத்த பட்டது.

இதையடுத்து மதியம் 3 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கும் கடற்கரைக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள நடுக்குப்பம், வி.ஆர் பிள்ளை தெரு, அனுமந்தபுரம், முற்றிலும் மீனவ பகுதிகளில் போலீசார் புகுந்து அங்குள்ள மீனவர்களை தலித் ஆண்களை கடுமையாக தாக்கி கைது செய்தனர்.

பெண்களை கடுமையாக திட்டி எச்சரித்தனர். மீன் அங்காடிகளை எரித்து சாம்பலாக்கினர்.

வாகனங்களை எரித்தது, வீட்டில் புகுந்து அடித்தது, என 23ஆம் தேதி காலை முதலே போலீசார் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

காலை இந்த பகுதிகளில் வீடுகளில் புகுந்து 25க்கும் மேற்பட்ட இளைஞர்களை கைது செய்தனர்.

இது தவிர 52 பேரை சிறையிலும் அடைத்துள்ளனர்.

இது குறித்து மயிலாப்பூர் துணை ஆணையர் பாலகிருஷ்ணனை சந்தித்து பேசிய போது அதை விசாரித்து தாக்கியிருந்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

அவர் உண்மையிலேயே நடவடிக்கை எடுக்க நினைத்தாலும் அவருடைய உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விடமாட்டார்கள்.

அப்படி நடந்ததாக சரித்திரமே இல்லை. நடந்த நிகழ்சிகளை நேரடியாக விசாரித்து அறிக்கையை வெளியிட்டேன். அதை வெளியிட கூடாது என்று ஊடகங்களுக்கு கமிஷனர் அலுவலகத்திலிருந்து கூறியதாக தெரிகிறது.

போராட்டத்தில் தீவிரவாதிகள்,தீவிரவாத அமைப்புகள் புகுநது விட்டது என்று தவறாக பிரச்சாரம் செய்க்ரார்கள்.

23ஆம் தேதி நடத்திய தாக்குதலில் மீனவர்களின் வாழ்வாதாரமான கடைகள் ஆட்டோக்கள் எரிக்கப்பட்டுள்ளது.

பலருக்கு கை கால் முறிவு தலை காயங்கள் ஏற்பட்டுள்ளது.

பொதுவாக எங்கள் விசாரணையில் குற்றம் செய்தவர்கள் கூட நாங்கள் நிரபராதிகள் என்று கூறி தப்பிக்க பார்த்தார்கள்.

ஆனால் இந்த தாக்குதலில் நான் அடித்து சொல்லுவேன் அத்தனை பேருமே அப்பாவிகள் என்பதே உண்மை.

 1984ல் எம்ஜியார் ஆட்சியில் இதே பகுதியில் நடந்த தாக்குதலுக்கு பிறகு இதுவே பெரிய தாக்குதல்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.