நாடு முழவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், பொதுமக்கள் தங்கள் கையில் இருப்பு வைத்துள்ள பணத்தை வங்கியில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து பொதுமக்கள் பழைய நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றி வருகின்றனர்.
இதனிடையே, பணம் பெற்றவர்களே மீண்டும் மீண்டும் வங்கிக்கு வருவதால் நீண்ட வரிசை ஏற்படுகிறது என்றும், மேலும் மற்றவர்கள் பணத்தை மாற்ற முடியாமல் தவிப்பதால் பணம் மாற்ற வருபவர்களுக்கு கைவிரலில் அழியாத மை வைக்கப்படும் என மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இதனைதொடர்ந்து வங்கிகளுக்கு மை அனுப்பும் பணி நடைபெற்றது.
மை வைக்கப்பட்ட பின்னரே பணம் தரப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில்,வடமாநிலங்களில் இன்று காலை முதலே, பணம் மாற்றவரும் பொதுமக்களுக்கு கைவிரலில் அடையாள மை வைக்கும் பணி தொடங்கியது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில், பெரும்பாலான வங்கிகளுக்கு மை வந்து சேராமல் இருந்தது.
இந்நிலையில், இன்று பிற்பகலில் சென்னையில் உள்ள ஒரு சில வங்கிகளுக்கு மை வந்து சேர்ந்ததை அடுத்து வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு ‘மை’ வைக்கும் பணி தொடங்கியுள்ளது.
