Asianet News TamilAsianet News Tamil

சிந்து மாடு வாங்க மட்டும் தான் கடன் தருவீர்களா? நாட்டு மாடு வாங்கவும் கடன் தர வேண்டும்...

indus loan-to-buy-a-cow-valankuvatupola-banks-offer-loa
Author
First Published Dec 24, 2016, 8:45 AM IST


கரூர்,

சிந்து மாட்டிற்கு வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது. அதேபோன்று நாட்டு மாடு வாங்கி வளர்க்க வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என்று ஆட்சியர் கோவிந்தராஜிடம் விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.

ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பிறகும் விவசாயி ராஜாராம், “வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் குறுவை பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை. சம்பா பயிரை காப்பாற்ற வடகிழக்கு பருவ மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் பொய்த்து போய் குறுவையும் சாகுபடி செய்ய முடியவில்லை. அதேபோன்று கரும்பு, வாழை, தென்னை ஆகியவை தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகிறது. மேலும், நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. எனவே, கரூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து இழப்பீடு பெற்று தந்து கரூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்” என்றுத் தெரிவித்தார்.

விவசாயி சுப்பிரமணி, “கரூர் மாவட்டத்தில் வறட்சிப் பகுதிகளை ஆய்வு செய்ய மாநில அளவில் ஒரு குழு அமைத்து அந்த குழுவினர் கரூர் மாவட்டம் முழுவதும் பார்வையிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று தற்போது விவசாயிகளின் சிரமத்தை கவனத்தில் கொண்டு விவசாயிகள் பெற்ற கடனை வசூலிப்பதை வங்கியாளர்கள் நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

இதேபோன்று விவசாயிகள் பலர், சிந்து மாட்டிற்கு வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது. அதேபோன்று நாட்டு மாடு வாங்கி வளர்க்க வங்கிகள் கடன் வழங்க வேண்டும். சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தொடர்ந்து கரூர் மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தினர், சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

பிறகு, ஆட்சியர் கோவிந்தராஜ் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்தார். அவர் பேசியதாவது:–

“இந்த ஆண்டு மழை இல்லாமல் போய்விட்டது. கரூர் மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை 652.20 மில்லி மீட்டர் பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 349.04 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. சராசரி மழை அளவை விட 46.4 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இதனால் பயிர்கள் காய்ந்துள்ளது. விவசாயிகளின் நிலைமை குறித்து அவ்வப்போது அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது. காய்ந்துள்ள அனைத்து விவசாய பயிர்ளையும் கணக்கெடுத்து அரசுக்கு அனுப்பி இழப்பீட்டு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள சீமை கருவேல மரங்கள் 20 நாள்களில் அகற்றப்படும். அதற்காக மாவட்ட அளவில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios