இராமநாதபுரம் 

பணி நிரந்தரம் செய்யக் கோரி மார்ச் 16-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றும் மின்வாரியத் தொழிலாளர்களுக்கு ஊதியம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

இதில் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்வது மற்றும்  அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது போன்ற கோரிக்கைகள் பின்னர் பரிசீலிக்கப்படும் என்று மின்வாரிய அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இராமநாதபுரத்தில் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களின் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மின்வாரிய மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவர் இராமச்சந்திரபாபு தலைமை வகித்தார். 

மாநிலச் செயலர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் குருவேல் சிறப்புரை ஆற்றினார்.
 
இந்தக் கூட்டத்தில், "மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அல்லது தினக் கூலி தொழிலாளர்களாக அறிவித்து நாள் ஒன்றுக்கு ரூ.380 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 16-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்தக் கூட்டத்தின் இறுதியில் மாவட்டச் செயலர் முருகன் நன்றித் தெரிவித்தார்.