ராம மோகன ராவ் வீட்டில் விடிய விடிய சோதனை….ஆவணங்களை அள்ளிச் சென்ற அதிகாரிகள்….
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் வீடு, அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் விடிய விடிய நடத்திய அதிரடி சோதனை இன்று அதிகாலையில் நிறைவு பெற்றது. சோதனையின் முடிவில் ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவக்கையாக 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது

இதைனையடுத்து, கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, கட்டுக்கட்டாக பணத்தை கைப்பற்றி வருகின்றனர்.இதில் புதியதாக வெளியிடப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஆட்சி அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமானவர் என கூறப்படும் தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் கடந்த வாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 131 கோடி ரூபாய் ரொக்கம் 171 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழக அரசியல் தலைவர்களுக்கும், முக்கிய உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் அண்ணாநகர் வீட்டிலும்,திருவான்மியூரில் உள்ள அவரது மகன் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
தலைமைச் செயலாளர் வீட்டில் உள்ள வரவேற்பு அறை, படுக்கை அறை, பூஜை அறை, மெயின் ஹால் உள்பட அனைத்து அறைகளிலும் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களும், கட்டுக் கட்டாக 30 லட்சம் ரூபாய்க்கு புதிய ரூபாய் நோட்டுகளும், 5 கிலோ தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணாநகரில் உள்ள ராம மோகன ராவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட அதேநேரத்தில் திருவான்மியூரில் உள்ள அவரது மகன் வீடு, அவரது உறவினர்கள் வீடுகள் மற்றும் ஆந்திரா மாநிலம் சித்தூர், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு உள்பட 13 இடங்களிலும் சோதனை நடந்தது.
இந்த சோதனையின் போது முதலில் தமிழக போஸீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் திடீரென பகல் 12
மணிக்கு,ஆயுதம் தாங்கிய ரிசர்வ் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டனர்.
ராம மோகன ராவின் வீட்டில் ஒரு புறம் சோதனை நடந்து கொண்டிருக்கும் போதே பிற்பகலில் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலக அறையிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து அவரது உதவியார்களிடமும் விசாரணைநடத்தப்பட்டது. பின்னர் கோப்புகள் , சி.டி.கள், ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ் என பல ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
தலைமைச் செயலாளர் அலுவலக அறையில் பிற்பகலில் தொடங்கிய இந்த சோதனை 7.40 மணி வரை நீடித்தது.
ஆனால் ராம மோகன ராவின் வீடுகள், அவரது மகன் விவேக் வீடு உள்ளிற்றவற்றில் விடிய விடிய சோதனை நடைபெற்றது.இந்த அதிரடி ஆய்வு இன்று காலையில் தான் நிறைவு பெற்றது.
தலைமைச் செயலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ராம மோகன ராவிடம் பல மணி நேரம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
விவேக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 30 லட்சம் ரூபாய் ரொக்க பணமும்,5 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டன.
தலைமைச் செயலாளர் ஒரு மாநிலத்தின் முதன்மை அதிகாரி என்பதால் மத்திய அரசின் அனுமதி பெற்ற பிறகே இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது..தமிழக அரசின் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் வீடு, தலைமை செயலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
