செங்கோட்டை பார்டர் பரோட்டா கடையில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பரோட்டா கடை உரிமையாளர் ரஹ்மத்-தின் வல்லம் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல்.. அந்த ஊரின் உணவுக்கு ஒரு ஸ்பெஷல் ருசி.. அதில் இந்த பார்டர் புரோட்டைவையும் சேர்க்கலாம். 

புகழ் பெற்ற உணவகங்கள் தமிழகத்தில் ஏராளமாய் உள்ளன. அதில் குறிப்பிடும்படியாக தென்னிந்தியாவிலேயே புகழ் பெற்று விளங்குபவை நெல்லை மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லையான பிரானூர் பார்டர், செங்கோட்டை ஆகிய பகுதியில் உள்ள புரோட்டா கடைகள்தான்.

 அதில் பிரபல சுற்றுலாத்தலமான குற்றாலத்திற்கு அருகே தமிழ்நாடு – கேரளா எல்லையில் செங்கோட்டையில் உள்ள பார்டர் பரோட்டா கடை, அசைவ உணவுகளுக்கு மிக பிரபலமானது. இந்த கடை பார்டர் பரோட்டா என்ற பெயரில் மிகவும் புகழடைந்து காணப்படுகிறது. 

மாலை 5 மணியில் இருந்து புரோட்டோவுக்காகவே க்யூவ் கட்டி நிற்பதை பார்க்க வேண்டுமானால் நீங்கள் பார்டர் கடைக்கு தான் போக வேண்டும். 

தியேட்டரில் முதல் ஷோவுக்கு டிக்கெட் கூட எடுத்துவிடலாம். ஆனால் பார்டர் கடையில் புரோட்டா வாங்குவதற்கு தனி திறமை வேண்டும் என்கிறார்கள் வாடிக்கையாளர்கள். 

30 லட்சம் உல்லாச பயணிகள் குற்றாலம் வந்தால், அதில் 60 சதவீதம் பேர் இங்கு சாப்பிடாமல் செல்வது கிடையாது. அந்தளவுக்கு புகழ் பெற்றவை இந்த கடைகள்.

இந்நிலையில், இந்த கடையில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பரோட்டா கடை உரிமையாளர் ரஹ்மத்-தின் வல்லம் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

வருமான வரித்துறை சோதனை நடப்பதால் கடையில் விற்பனை முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.