கூடலூர்,

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அடர்ந்த வனப்பகுதியில் கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்த 15 மாவோயிஸ்டுகளை சுற்றிவளைத்தபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் கமாண்டோ தலைவர் உள்பட 3 மாவோயிஸ்டுகள் அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கேரள மாநிலம் வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணனூர், பாலக்காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்தது.

இந்த நிலையில் 2010–ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8–ஆம் தேதி நிலம்பூர் அருகே சொர்னூர் இரயில் நிலையத்தில் நின்றிருந்த இரயில் பெட்டிகள், என்ஜின் மற்றும் தண்டவாளம் உள்பட 20 இடங்களில் இரும்பு வாள்கள் கொண்டு அறுக்கப்பட்டு இருந்தது. இந்த நாசவேலை குறித்து காவலாளர்கள் விசாரணை நடத்திய போது மாவோயிஸ்டுகள்தான் இதற்கு காரணம் என தெரியவந்தது.

மேலும் 2013–ம் ஆண்டு நிலம்பூர், நீலகிரி, சைலன்ட் வேலி, பாலக்காடு, அட்டப்பாடி, மானந்தவாடி உள்ளிட்ட பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நிலம்பூர், அட்டப்பாடி, மானந்தவாடி உள்ளிட்ட இடங்களில் மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல்களில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவோயிஸ்டுகளின் கமாண்டோ தலைவர் குப்புதேவராஜ் (57) தலைமையிலான மாவோயிஸ்டுகள் மீது வயநாடு, கண்ணனூர், கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் 50 வழக்குகளை காவலாளர்கள் பதிவு செய்தனர்.

கேரள தண்டர்போல் அதிரடிப்படை காவலாளர்கள் துப்பாக்கிகளை ஏந்தியவாறு வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கூடலூர் அருகே கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் நிலம்பூர் படகா சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் மத்திய புலனாய்வு பிரிவு காவல் சூப்பிரண்டு சுனில்குமார் தலைமையிலான 60 தண்டர்போல் அதிரடிப்படையினர் இரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் வியாழாக்கிழமை அதிகாலை 5 மணிக்கு வனப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது படகா வனச்சரக அலுவலகத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் கூடாரங்கள் அமைத்து 15 மாவோயிஸ்டுகள் தங்கி இருப்பதை பகல் 12 மணிக்கு காவலாளர்கள் கண்டுபிடித்தனர். மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்து பிடிக்க அதிரடிப்படை போலீசார் முயன்றனர்.

ஆனால் காவலாளர்கள் வருவதை அறிந்த மாவோயிஸ்டுகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இருதரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையால் மாவோயிஸ்டுகள் நாலாபுறமும் சிதறி ஓடி தப்பினர். இதில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காவலாளர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவோயிஸ்டுகளின் கமாண்டோ தலைவர் குப்புதேவராஜ் (57), பெண் மாவோயிஸ்டு அஜிதா (40) மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு மாவோயிஸ்டு என மொத்தம் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மாவோயிஸ்டுகளின் உடல்களை காவலாளர்கள் தேடினர். அப்போது மாவோயிஸ்டுகளின் கமாண்டோ தலைவர் குப்புதேவராஜ், பெண் மாவோயிஸ்டு அஜிதா ஆகியோரின் உடல்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தனர். அவர்களது உடல்களை காவலாளர்கள் கைப்பற்றினர். துப்பாக்கி சூட்டில் பலியான குப்புதேவராஜ் தமிழகத்தை சேர்ந்தவர் என்றும், அஜிதா எந்த ஊரை சேர்ந்தவர் என்றும் தெரியவில்லை என காவலாளர்கள் கூறினார்கள்.

தொடர்ந்து மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள இடங்கள் என கண்டறியப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலாளர்கள் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். இதேபோல் தப்பி ஓடிய மாவோயிஸ்டுகள் கூடலூர், பந்தலூர் தாலுகா வனங்களில் பதுங்கி உள்ளனரா? என தமிழக அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.