in Tiruvarur Farmers protest 4 hours traffic impact negotiations are not taking place

திருவாரூர்

திருவாரூரில் பாசனத்திற்கு இடையூறாக இருந்த தடுப்பணையை இடிக்க வலியுறுத்தி விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை எடுபடாததால் சுமார் 4 மணிநேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகம், இடும்பாவனம், தொண்டியக்காடு, கற்பகநாதர்குளம், வாடியக்காடு ஆகிய கடைமடை பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

காவிரியில் தாமதமாக தண்ணீர் திறப்பு, பருவமழை பெய்யாதது போன்றவற்றால் மூன்று முறை நேரடி நெல் விதப்பு செய்த பயிர்கள் வீணாகின.

அதன்பின்னர் 4-வது முறையாக இந்தப் பகுதியில் விவசாயிகள் பிபிடி உள்ளிட்ட நெல் விதைப்பு செய்து, பல்வேறு சிரமங்களுக்கிடையே பயிரை வளர்த்து அறுவடைக்குத் தயார் நிலைக்கு வந்தது.

இப்பகுதி பாசனத்துக்கு இடையூறாக மரைக்காகோரையாற்றில் தில்லைவிளாகம் பகுதியில் உள்ள தடுப்பணையை (மண்மேடு) இடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாசனத்திற்கு சம்பந்தப்பட்ட கிராம விவசாயிகள் இடும்பாவனம், தில்லைவிளாகம் மரைக்காகோரையாறு பாலத்தில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கு ஊராட்சி முன்னாள் தலைவர் பூவாணம் தலைமைத் தாங்கினார். இந்த சாலை மறியலில் ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர்கள் உலகநாதன், மதியழகன், ரவி உள்ளிட்ட ஐந்து கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மறியல் குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்குவந்த முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் (பொ) சுப்ரியா, வருவாய் ஆய்வாளர் தங்கதுரை ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள், "உடனடியாக இந்தப் பகுதியிலுள்ள தடுப்பணையை இடிக்க வேண்டும்" என்று வலியுறுத்தி மறியலைத் தொடர்ந்தனர். பின்னர், தடுப்பணையை விவசாயிகளே இடித்து தள்ளினர். பின்னர், அங்கிருந்த வருவாய்த் துறையினர் சென்றனர். மறியலும் விலக்கிக் கொள்ளப்பட்டது.

விவசாயிகளின் இந்த சாலை மறியலால் 4 மணி நேரம் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.