In Thiruvannamalai one lakhs people saving accounts are linked with aadhaar

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் அஞ்சல் கோட்டத்தில் ஒரு இலட்சத்து 44 ஆயிரம் அஞ்சலக சேமிப்புக் கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள் தங்களது ஆதார் எண்ணை சேமிப்புக் கணக்குடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

அந்த உத்தரவை ஏற்று பல்வேறு மாநிலங்களிலும், ஆதார் இணைப்பு நடைப்பெற்றது. அதன்படி, தமிழகத்திலும் இந்தப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களின் கணக்குடன் ஆதார் எண் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் நேற்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், "திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 2018 ஜனவரி வரை 6 இலட்சம் சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. இவற்றில் ஒரு இலட்சத்து 44 ஆயிரம் சேமிப்புக் கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது.

விடுபட்ட வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு அஞ்சலக ஊழியர்கள் நேரடியாகச் சென்று ஆதார் எண் இணைப்பதற்கான விண்ணப்பங்களை வழங்கி, அவற்றை பூர்த்தி செய்து பெற்று வருகின்றனர்.

அஞ்சலக சேமிப்புக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் வரை அவகாசம் உள்ளது. இதற்குள் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.