திருவாரூர் 

மோடியின் தமிழகம் வருகையை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் திருவாரூரில் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடி கையில் ஏந்தி போராட்டங்கள் நடத்தப்பட்டன.

கருப்பு கொடி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனப்போக்குடன் நடந்துகொள்வதைக் கண்டித்தும், தமிழகத்துக்கு பிரதமர் வந்த வியாழக்கிழமையை, துக்க நாளாக அனுசரிக்கும் வகையில், மன்னார்குடியில் பல்வேறு அரசியல் கட்சி அலுவலகங்களில் கருப்புக் கொடி கட்டப்பட்டு, ஊர்வலம் நடைபெற்றது.

காந்திஜீ சாலையில் உள்ள நகர திமுக அலுவலகத்திலிருந்து, கட்சியின் நகரச் செயலர் வீரா. கணேசன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர், இருசக்கர வாகனத்தில் கருப்புக் கொடியுடன், நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று, மீண்டும் கட்சி அலுவலகத்தை வந்தடைந்தனர்.பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில், கருப்புக் கொடியேற்றி வைக்கப்பட்டது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்...

இதேபோல, மகா மாரியம்மன்கோயில் தெருவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் முன்பு, கட்சியின் ஒன்றியச் செயலர் ஆர். வீரமணி, கருப்புக் கொடியேற்றினார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்...

ஆசாத்தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் வளாகத்தில், அக்கட்சியின் நகரச் செயலர் எஸ். ஆறுமுகம் கருப்புக் கொடியேற்றினார்.

மன்னார்குடியில்...

இதேபோன்று, பெரியக்கடைதெருவில் தந்தை பெரியார் படிப்பகத்தில்,திராவிடர் கழக நகரச் செயலர் மு. ராமதாஸ், கருப்புக் கொடியேற்றினார். மேலும், மன்னார்குடி மட்டுமன்றி கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

முத்துப்பேட்டையில்...

பிரதமர் மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டையில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. மேலும், நூற்றுக்கணக்கானோர் கருப்புச் சட்டைகளை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 

வீடு, கடைகளில் கருப்புக் கொடி...

காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடியைக் கண்டித்து நீடாமங்கலத்தில் நேற்று தி.மு.க. மாணவரணி மாநில முன்னாள் இணைச் செயலாளர் வழக்குரைஞர் சோம. செந்தமிழ்ச்செல்வன் தலைமையில், வர்ததகர் சங்கத்தலைவர் பி.ஜி.ஆர். ராஜாராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் சந்துரு,  நகர த.மா.கா. தலைவர் ராஜன் ரமேஷ், காங்கிரஸ் நிர்வாகி பாபு உள்ளிட்டோர் கடைவீதியில் உள்ள கடைகளில் கருப்புக் கொடிகளை ஏற்றினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், வியாழக்கிழமை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக வீடு மற்றும் கடைகளில் கருப்புக் கொடி ஏற்றுவது என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 

அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில், நேற்று திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னார்குடி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தன. திருவாரூரில் பெரும்பாலான கடை மற்றும் வீடுகளில் கருப்புக் கொடி கட்டப்பட்டிருந்தது.