புதுக்கோட்டை

துணை இராணுவ படை உதவியுடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் கல்குவாரிகளில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா குறித்த புகாரைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரின் சென்னை வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சௌராஷ்டிரா தெருவில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் வீட்டின் எதிரே உள்ள அலுவலகம், தங்கும் விடுதி, தோட்டம், மேட்டுச் சாலையில் உள்ள மதர்தெரசா கல்வி நிறுவனங்கள், திருவேங்கைவாசலில் உள்ள கல்குவாரி, திருமயம் அருகே நச்சாந்துபட்டியில் உள்ள அமைச்சரின் உறவினர் வீடு ஆகிய இடங்களில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து கடந்த 8-ஆம் தேதி திருச்சி வருமான வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி, அண்ணன் உதயகுமார் ஆகியோர் நேரில் சரணடைந்தார்கள். அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை அருகே திருவேங்கை வாசல் பகுதியில் இருக்கும் அமைச்சர் விஜயபாஸ்கரின் கல்குவாரிக்கு ஐந்து காரில் வருமானவரித்துறை மற்றும் மத்திய கனிமவளத்துறை அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்டோர் நேற்று மீண்டும் வந்தனர்.

இதில் ஒரு காரில் வந்த அதிகாரிகள் மட்டும் முத்துடையாம்பட்டி அருகே உள்ள ஒரு கல்குவாரியில் கள ஆய்வு செய்தனர். பின்னர் அங்கு ஆய்வை முடித்த அதிகாரிகள் மீண்டும் திருவேங்கைவாசல் கல்குவாரிக்கு வந்து துணை இராணுவ படைவீரர்கள் பாதுகாப்புடன் தொடர்ந்து சோதனையில் நடத்தினர். அப்போது கல்குவாரியில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

கல்குவாரியில் கல் எடுக்க தோண்டப்பட்ட இடங்களை அளந்து குறித்துக் கொண்டனர். மேலும் புகைப்படங்களும் எடுத்தனர். விஜயபாஸ்கர் நிர்வாகத்தின் கீழ் உள்ள திருவேங்கை வாசல் கல்குவாரி இலுப்பூர் அருகே கரடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா என்பவர் பெயரில் உரிமம் பெறப்பட்டுள்ளது.

இந்த பகுதிக்கான குத்தகை காலம் வருகிற 3.10.2018 வரை உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. திருவேங்கைவாசல் கல்குவாரியில் ரெடி மிக்ஸ் கான்கிரீட், தார் பிளாண்ட், கிரஷர் ஜல்லி, பவர் பிளாக் கற்கள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இந்த குவாரியை சுற்றிலும் பெரிய சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.

ஒரு நாளைக்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் குவாரிக்கு வந்து செல்கின்றன. இதனால் இந்த குவாரியில் நாள் ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் அளவுக்கு வியாபாரம் நடைபெற்று வருகிறது.

விஜயபாஸ்கர் கல்குவாரியின் இடங்கள் ஒருவரது பெயரிலும், உரிமம் மற்றொருவர் பெயரிலும் உள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் சில வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கியுள்ளன.

திருவேங்கைவாசலில் உள்ள கல்குவாரியில் நேற்று சோதனை நடைபெற்றபோது குவாரியின் நுழைவு வாயிலில் துணை இராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.