In the northeast monsoon in Chennai groundwater has risen by up to 10 feet.
சென்னையில் பெய்த வடகிழக்கு பருவமழையால் நிலத்தடி நீர்மட்டம் 10 அடி வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கி தீவிரமடைந்தது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்தது.
சென்னையில் சில நாள்கள் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால், சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கின. குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகினர்.
அதிகளவாக சென்னை மயிலாப்பூர் பகுதியில் ஒரே இரவில் 30 சென்டி மீட்டர் மழை கொட்டியது.
அண்ணாநகர், மயிலாப்பூர், திநகர், நந்தனத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 6 அடி அளவிற்கு நிலத்தடி நீர் குறைந்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் கோயம்பேடு, வடபழனி, மயிலாப்பூர் மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் மழையளவு குறித்த ஆய்வை தனியார் அமைப்பு நடத்தியது.
தற்போது வடகிழக்கு பருவமழை காரணமாக அடையாறு, மயிலாப்பூர், பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் கிணறுகளில் 10 அடி அளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மேற்கு மாம்பலம், விருகம்பாக்கம், நெசப்பாக்கம், அசோக்நகர் ஆகிய இடங்களிலும் நிலத்தடி நீர் கணிசமாக உயர்ந்துள்ளது.
மண்ணின் தன்மைக்கு ஏற்ப நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக மழை அளவு குறித்த ஆய்வு மையத்தின் நிர்வாகி ராகவன் கூறியுள்ளார்.
