மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தமிழக அரசின் 'நீட்' அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று கூறி மத்திய அரசு திடீர் நிலைப்பாட்டை எடுத்துள்ளது.நீட் தேர்வில் தேர்வான மாணவர்கள், தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவர்களுக்கு ஆதரவாக  வழக்குரைஞர்நளினி சிதம்பரம் ஆஜராகி வாதாடினார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த வியாழன் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மருத்துவக் கலந்தாய்வை நடத்துவதில் தாமதம் ஏன்  தமிழகத்துக்கு நீட்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க எதன் அடிப்படையில் மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது என்று மத்திய அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே வேணுகோபால்நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே வேணுகோபாலுக்குபதிலாக கூடுதல் தலைமைவழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார்.

அவர் நீதிமன்றத்தில், தெரிவிக்கையில்,  நீட் விலக்கு குறித்து ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்குள் தமிழகத்தின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் தரப்படும்  அவசர சட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று வாதிட்டார். இதை கருத்தை தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதனால், தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஒரு ஆண்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் ஒரு ஆண்டுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசும் சம்மதம் தெரிவித்து இருந்ததால், மிகுந்த நம்பிக்கையுடன் தமிழக அரசு இருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது,மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தமிழக அரசின் 'நீட்' அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது. இது போல பொதுவான தேர்வில், ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது’’ என்று திடீர் பல்டி அடித்தார்.

இதற்கு முன் நடந்த விசாரணையின் போது, தமிழக அரசின் நீட் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதில் தவறில்லை, இதில் நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று மத்திய அரசு சார்பில் இதை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று நடந்த விசாரணையின் போது, அந்த நிலைப்பாட்டையே முற்றிலும் மாற்றி, நீட்தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது எனக் கூறி இருப்பது அதிர்ச்சியாக அமைந்துள்ளது.