கணவன் - மனைவிபோல் நடித்து கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற இன்ஜினியர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, தியாகராய நகர், ஜி.என்.செட்டி சாலையில் வசிப்பவர் டாக்டர். ராதாகிருஷ்ணன் (74). இவரும் இவரது மனைவி ஜெயசித்ராவுடன் தனியாக வசித்து வருகிறார். நேற்று
பகலில் டாக்டர் ராதாகிருஷ்ணன் வீட்டு கதவை தட்டும் சத்தம் கேட்டு, ராதாகிருஷ்ணன் கதவை திறந்துள்ளார்.

வெளியில் ஆண், பெண் இருவர் நின்று கொண்டிருந்தனர். தங்களை கணவன் - மனைவி என்று கூறிக் கொண்ட அவடர்கள், வீடு வாடகைக்கு வேண்டும் என்று கேட்டுள்ளனர். 

மனைவி என்று கூறிக் கொண்டிருந்தவர், துப்பாட்டாவில் வாய் பகுதியை மூடிக் கொண்டிருந்தார். திடீரென துப்பட்டா விலகியதால், அவர் பெண் வேடத்தில் இருந்த ஆண்
என்பது தெரியவந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ராதாகிருஷ்ணன், அவர்களை வெளியே போகும்படி கூறியுள்ளார். 

அப்போது, ராதாகிருஷ்ணனை அவர்கள் தாக்கியுள்ளனர். இதேபோல், ஜெயசித்ராவையும் அவர்கள் தாக்கி அவர்கள் இருவர் முகத்திலும், மயக்கப்பொடியை தூவி உள்ளனர்.
அப்போது ராதாகிருஷ்ணன், வீட்டை விட்டு வெளியே வந்து காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள், தப்பியோட
முயன்ற அவர்கள் இருவரையும் பிடித்து, பாண்டிபஜார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

விசாரணையில் அவர்களில் ஒருவர் பிரகாஷ் (29) என்பதும் இவர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேட்ரந்தவர் என்பது தெரியவந்தது. இவர் இன்ஜினியரிங் படித்துள்ளார். மற்றொருவரின் பெயர் சுஜாந்த் (19). பழனியைச் சேர்ந்த இவர், கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.  அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.