Immediately stop setting up a shop - Marxist Communist Party petition
திருச்சி
எங்கள் பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடை அமைவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு ஒன்றை ஆட்சியரகத்தில் கொடுத்தனர்.
திருச்சி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் நேற்று ஆட்சியர் அலுவலகத்தின் முன் திரண்டனர்.
இவர்களுக்கு அக்கட்சியின் பொன்மலை பகுதிச் செயலாளர் கார்த்திகேயன் தலைமைத் தாங்கினார். அவர்கள் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அபிராமியிடம் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த மனுவில், “திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 30–வது வார்டில் மூகாம்பிகை நகர் விஸ்தரிப்பு பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடை அமைக்கப்போவதாக அறிந்தோம்.
இந்தப் பகுதியில் மகாலெட்சுமிநகர், ஆனந்தம்நகர், பாக்யாநகர், எழில்நகர், முத்துநகர், எல்.ஐ.சி. நகர், கோகுல்நகர், சோமசுந்தரநகர், மூகாம்பிகைநகர், அழகுநகர், ராகவேந்திராநகர், விவேக்நகர் ஆகிய பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கிருந்து ஏராளமான பெண்கள், மாணவ – மாணவிகள் பள்ளி, கல்லூரிக்குச் செல்லக்கூடிய பகுதியாக இது உள்ளது. ஏற்கனவே இந்தப் பகுதியில் பல்வேறு வழிப்பறி சம்பவங்கள் நடந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.
இந்தநிலையில் இங்கு சாராயக் கடை அமைத்தால் நிலைமை இன்னும் மோசமாகும். எனவே, இந்தப் பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடை அமைவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டு இருந்தனர்.
