பெரம்பலூரில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் தொண்டமாந்துறை பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (28). அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (30). இவர்கள் இருவரும் பேச்சாயி அம்மன் கோவிலுக்கு செல்லும் தெருவிளக்கு மின் வயரில் சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்து கல்லாற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிக்க முயற்சித்துள்ளனர்.
மின்சாரம் பாய்ச்சி மீன் பிடித்தல்
இவ்வாறு கையில் மின் வயரை வைத்துக்கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து அவர்களை தாக்கியது. இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணை
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் பிணமாக மிதந்த அவர்கள் இரண்டு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற சட்ட விரோதமாக சிலர் மீன் பிடிப்பதாக ஊர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


