கரூர் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக, ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது. இந்த வழக்கில் காவல்துறை மற்றும் தவெக கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஐ.ஜி. அஸ்ரா கார்க் (Asra Garg) தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (Special Investigation Team - SIT) நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்பாக நடத்த வழிகாட்டு நெறிமுகளை வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி செந்தில்குமார் இந்த முக்கிய உத்தரவைப் பிறப்பித்தார்.

கரூர் காவல்துறை இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனடியாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்குமாறு நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

வாகனத்தை பறிமுதல் செய்யாதது ஏன்?

விஜயின் வாகனம் மோதி இளைஞர்கள் காயம் அடைந்துள்ள நிலையில், வாகனத்தைப் பறிமுதல் செய்யாதது ஏன்? இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? புகார் அளிக்கவில்லை என்றாலும் வழக்குப்பதிவு செய்யலாம் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.

த.வெ.க.வை கடுமையாக விமர்சனம் செய்த நீதிபதி, “இது என்ன விதமான கட்சி? சம்பவம் நடந்த பிறகு எந்த அக்கறையும் இல்லாமல், அந்தக் கட்சியினர் அனைவரும் உடனே அங்கிருந்து சென்றுள்ளனர். அவர்கள் அங்கேயே இருந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். அந்தக் கட்சிக்கு நோட்டீஸ் பிறப்பிக்காதது ஏன்” எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். அரசியல் கட்சிகளின் இத்தகைய செயலை நீதிமன்றம் கடுமையாகக் கண்டிக்கிறது என்றும் நீதிபதி கூறினார்.

ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை

தவெகவின் ஆதவ் அர்ஜுனா எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. தமிழக அரசு இந்த வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, ஆதவ் அர்ஜுனாவின் சமூக வலைத்தளப் பதிவுக்காக அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பில் கூறப்பட்டது.

அந்தப் பதிவை பார்வையிட்ட நீதிபதி, “ஒரு சின்ன வார்த்தை பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும். இவர்கள் எல்லாம் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? இவர் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.