ஐ.எப்.எஸ். நிர்வாக இயக்குநர் உள்பட 10 பேருக்கு பிடிவாரண்ட்
அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து முதலீடுகளை பெற்று ரூ.56 கோடி வரை ஏமாற்றிய வழக்கில் IFS நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உள்பட 10 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்விசஸ் எனப்படும் ஐஎப்எஸ் நிறுவனமானது பொதுமக்கள் முதலீடு செய்யும் தொகைக்கு 10 முதல் 25 சதவீதம் வரை மாதம்தோறும் வட்டி தருவதாகக் கூறி பல ஆயிரம் கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக 200 முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ரூ.56 கோடியே 82 லட்சம் மோசடி செய்ததாக ஐஎப்எஸ், மார்க் உள்பட 6 நிறுவனங்களின் இயக்குநர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கு தொடர்பாக, நிறுவன இயக்குநர் மோகன்பாபு, நிர்வாகிகள் சரவணகுமார், குப்புராஜ், ஜெகனநாதன் உள்பட 13 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சிறப்பு பரிசு!!
இந்நிலையில், வழக்கு தொடர்பான விசாரணை இன்று மீண்டும் வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 பேர் மட்டுமே நேரில் ஆஜராகினர். 10 பேர் ஆஜராகாத நிலையில், அவர்கள் 10 பேரையும் வருகின்ற 28ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டு 10 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார்.