If you put green ways road against our opposition we will not alive to see it

சேலம்

எங்கள் எதிர்ப்பை மீறி பசுமை வழி சாலையை அமைத்தால் அதை பார்க்க நாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம். தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று வழி பசுமை சாலையை எதிர்த்து விவசாயிகள் குமுறுகின்றனர். 

ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சேலம் - சென்னை இடையே எட்டு வழி பசுமை விரைவு சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தச் சாலை அமைக்கும் திட்டத்திற்காக சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாய நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ள தமிழக அரசு தற்போது நிலம் அளவீடு செய்யும் பணியில் இறங்கியுள்ளது. கடந்த 18-ந் தேதி இந்தப் பணி தொடங்கியது. 

பசுமையை அழித்து பசுமை வழி சாலையா? என்று ஒட்டுமொத்த தமிழக விவசாயிகள், மக்கள் என அனைவரும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் மக்களின் கருத்தை கேட்காமல், உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காமல் எடப்பாடி பழனிச்சாமி அரசு இந்த திட்டத்தில் முழு மூச்சுடன் முன்னேறுகிறது.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில், அயோத்தியாபட்டணம் அருகே ஆச்சாங்குட்டப்பட்டி, குப்பனூர், ராமலிங்கபுரம், நிலவாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காவல் பாதுகாப்புடன் வருவாய்த்துறை அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்து எல்லைக்கல்லை நட்டனர். 

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெறவில்லை. அதனைத் தொடர்ந்து நேற்று 7-வது நாளாக தாசில்தார் சுந்தரராஜன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் நிலம் அளவீடு செய்யும் பணியை தொடங்கினர். 

சேலம் அருகே பாரப்பட்டியில் இந்த பணி தொடங்கி பூலாவரி, வீரபாண்டி, சித்தனேரி, உத்தமசோழபுரம் வரையிலான 2.86 கிலோ மீட்டர் தூரத்திற்கான நிலம் அளவீடு பணி நடைபெற்றது.

இந்த பகுதிகளில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவருடைய மகன் வீரபாண்டி ராஜா, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் அணியின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.கே.செல்வம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் நிலங்கள் உள்ளதால் காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் என 200-க்கும் மேற்பட்ட காவலளர்களின் பாதுகாப்பில் நில அளவீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்காக காவலாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பூலாவரி புஞ்சைக்காடு பகுதியில் அப்புசாமி நாயக்கர் தோட்டத்தில் அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்தனர். இதற்கு அங்கிருந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதேபகுதியில் தனம் என்ற மூதாட்டியின் வீடு, அவருடைய தென்னை மர தோட்டம் ஆகியன பசுமை சாலைக்காக நிலம் அளவீடு செய்யப்பட்டது. அப்போது அவர், "கடன் வாங்கி கட்டுன வீடு பறிபோகுதே, இனி நடுரோட்டுக்கு தான் போகணும்' என்று கதறி அழுதார்.

சக்திவேல் என்ற விவசாயி வீட்டின் பாதி பகுதி மற்றும் தென்னை தோட்டத்தில் அதிகாரிகள் நிலம் அளவீடு செய்தனர். இதை பார்த்ததும் சக்திவேலின் மனைவி செல்வி, அவருடைய உறவினர்கள் கண்ணீர் விட்டு மார்பில் அடித்துக் கொண்டு கதறி அழுதனர். 

"பேரனுக்காக கட்டப்பட்ட இந்த வீட்டை இடிப்பதற்கு முன், எங்களை கொன்றுவிட்டு நிலத்தை எடுத்து கொள்ளுங்கள்" என்று கூறிய படி செல்வி தரைவில் படுத்து உருண்டு புரண்டார். பின்னர், திடீரென மயங்கிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தேற்றினர். 

சக்திவேல் தென்னை தோட்டத்தில் தேங்காய்கள் பறிக்கப்பட்டு ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டு இருந்தன. அந்த இடத்தில் அதிகாரிகள் நிலம் அளவீடு செய்து எல்லைக்கல்லை நட்டனர்.

இதை பார்த்த விவசாயிகள் ஆத்திரமடைந்து தோட்டம் மற்றும் வீட்டின் பின்பகுதியில் நடப்பட்ட எல்லைக்கலை பிடுங்கி வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த காவலாளர்கள், கல்லை பிடுங்கினால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதற்கு சக்திவேல், "என் வீடே பறிபோகுது நீங்கள் எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள்" என்று கண்ணீர் விட்டார்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, ‘பசுமை வழிச்சாலை திட்டத்துக்காக விவசாயிகளை வற்புறுத்தி நிலங்களை பெறக்கூடாது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் போலீசாரை வைத்து மிரட்டி நிலங்களை பறித்து வருகின்றனர். சென்னைக்கு செல்ல பல வழிகள் உள்ளன. ஆனால் எங்களுடைய வீடுகள், நிலங்களை அழித்து பசுமை சாலை அமைக்கிறார்கள். எங்கள் எதிர்ப்பை மீறி இந்த சாலையை அமைத்தால் அதை பார்க்க நாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம். தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம்‘ என்றனர்.