If you have doubts about GST ask in the Commercial Taxation Center - Rushmi Siddharth Jagade ...

ஜி.எஸ்.டி. குறித்து சந்தேகங்கள் இருந்தால் வணிகவரித்துறை அலுவலகத்தில் இருக்கும் உதவி மையத்தை அணுகினால் விளக்கம் அளிக்கப்படும் என்று கோவை மாவட்ட வணிக வரித்துறை இணை ஆணையர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.

இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி இன்று முதல் அமலாகிறது. இதனையொட்டி கோவை மாவட்ட வணிக வரித்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைப்பெற்றது.

இந்த ஊர்வலத்தை இணை ஆணையர் ரஷ்மி சித்தார்த் ஜகடே விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலத்தில் வணிக வரித்துறை இணை ஆணையர் (செயலாக்கம்) அம்ரித், மத்திய கலால் வரி மற்றும் சுங்கத்துறை கூடுதல் ஆணையாளர் பிரமோத், துணை ஆணையாளர்கள் அருணாச்சலம், கார்த்திக், கயல்விழி, ஞானமூர்த்தி, ராஜி ஆகியோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட வணிகவரித்துறை ஊழியர்கள் ஜி.எஸ்.டி. வரி பற்றிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

இணை ஆணையர் ரஷ்மி சித்தார்த் ஜகடே பேசியது:

“ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படுவதை ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை கோட்ட வணிக வரித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களால் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை என்பதை வலியுறுத்தும் வகையில் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்படுகிறது. ஜி.எஸ்.டி. வரியை பற்றி வியாபாரிகள் பயப்படத் தேவையில்லை. இதை கையாள்வது எளிது. இதில் சந்தேகங்கள், அறிவுரைகள் வேண்டுமென்றால் வணிகவரித்துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை நாடலாம். இங்கு அவர்களுக்கு அதுபற்றி விளக்கம் அளிக்கப்படுகிறது” என்று அவர் பேசினார்.

விழிப்புணர்வு ஊர்வலம் வணிக வரித்துறை அலுவலகத்தில் இருந்து தொடங்கி டாக்டர் பாலசுந்தரம் சாலை, கிராஸ்கட் சாலை, டாக்டர் நஞ்சப்பா சாலை மற்றும் அவினாசி சாலை வழியாக மீண்டும் வணிகவரித்துறை அலுவலகத்தில் முடிவடைந்தது.

இந்த பேரணியில் வணிகர்கள், பட்டயகணக்காளர்கள் வக்கீல்கள், விற்பனை வரி ஆலோசகர்கள் மற்றும் கணக்காளர்கள் 500–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.