if Vijayadharani join AIADMK will not impact Congress
கன்னியாகுமரி
விஜயதாரணி எம்எல்ஏ அதிமுகவில் சேர்ந்தாலும் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று காங்கிரசு தொழிற்பிரிவு மாநிலத் தலைவர் மோகன் குமாரமங்கலம் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட காங்கிரசு ஓபிசி பிரிவு அணி துணைத் தலைவர் மருத்துவர் அனிதா, மகிளா காங்கிரஸ் மாவட்ட முன்னாள் தலைவர் சாந்திரோஸ்லின் ஆகியோர், "காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விவாத மேடையில் மரியாதையின்றி பேசியதற்காகவும், கட்சியின் கட்டுப்பாட்டை எதிர்த்த காரணத்துக்காகவும் விஜயதாரணி தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் காங்கிரசு தொழிற்பிரிவு மாநிலத் தலைவர் மோகன் குமாரமங்கலம் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.
அதில், "தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறந்து வைத்ததற்கு காங்கிரசு கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், காங்கிரசு கட்சி எம்.எல்.ஏ-வான விஜயதாரணி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கட்சி மேலிடத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீதான நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம்.
விஜயதாரணி எம்எல்ஏ அதிமுகவில் சேர்ந்தாலும் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது" என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பேட்டியின்போது கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரசு தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
