வர்தா புயல் பாதிப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், வறட்சி நிவாரணம், பயிர்க்கடன் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்.

கடந்த 41 நாட்களாக தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதேபோல், டெல்லியில் நடந்த தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்பட பல்வேறு வடமாநில விவசாயிகளும் போராட்டத்தில் களம் இறங்கினர்.

ஆனால், விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேச்சு வார்த்தைக்கும் அழைக்கவில்லை. இதையடுத்து, அனைவரும் சொந்த ஊர் புறப்பட்டு, இன்று காலை சென்னை வந்து சேர்ந்தனர்.

ரயிலில் இருந்து இறங்கிய அவர்கள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது, போராட்ட குழு தலைவர் அய்யாகண்ணு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் போராட்டம் நடத்தியபோது, எங்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்வோம் என மிரட்டல்கள் வந்தன. கோரிக்கைகளை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுப்பதாக, பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார். தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவால் 15 நாட்களில் முடிவு சொல்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முடிவு கிடைக்காவிட்டால் மே 25 முதல் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும். பிரதமர் மோடி, எங்களை சந்திக்க மறுத்ததால் தான் அவரது அலுவலகம் முன்பு நிர்வாண போராட்டம் நடந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.