Asianet News TamilAsianet News Tamil

கர்நாடகாவில் பா.ஜ.க வென்றால்தான் தமிழகத்திற்கு நல்லது நடக்கும் - பூச்சாண்டி காட்டுகிறாரா பொன்.ராதாகிருஷ்ணன்?

If BJP wins in Karnataka then only good for Tamil Nadu - frightening pon.Radhakrishnan
If BJP wins in Karnataka then only good for Tamil Nadu - frightening pon.Radhakrishnan
Author
First Published Apr 19, 2018, 9:44 AM IST


கன்னியாகுமரி

கர்நாடகாவில் வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும். பா.ஜனதா வெற்றி பெற்றால்தான் தமிழகத்துக்கு நன்மை நடக்கும்.என்று நாகர்கோவிலில் அளித்த பேட்டியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

அம்பேத்கர் பிறந்த தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பா.ஜனதா கட்சியினர் நேற்று நாடு முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்திலும் பா.ஜனதா கட்சியினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவிலில் குளத்தூர், சாஸ்திரிநகர், ஊட்டுவாழ்மடம், காட்டுநாயக்கன் தெரு, அருந்ததியர்நகர், காந்தி பார்க் உள்பட 10 இடங்களில் தூய்மை பணி நடந்தது. வடசேரி காந்தி பார்க்கில் மத்திய மத்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

பொன்.ராதாகிருஷ்ணன் மண் வெட்டி மூலம் குப்பைகளை சேகரித்தார். பின்னர் கைகளால் குப்பைகளை அள்ளி அப்புறப்படுத்தினார்.

அதன்பின்னர், பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்த முயற்சித்து செல்போனில் பேசியது முதல் முறை போன்று தெரியவில்லை. பல ஆண்டுகளாக இதுபோன்று அவர் ஈடுபட்டு வந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். 

எனவே, இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். இதுபோன்று அந்த ஒரு கல்லூரியில் மட்டும்தான் நடந்ததா? அல்லது வேறு கல்லூரி மாணவிகளுக்கும், வேறு பெண்களுக்கும் இது போன்ற தொல்லை நடந்திருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்வது அவசியம். 

மாணவிகளை பாலியலில் ஈடுபடுத்த முயற்சித்த கல்லூரி பேராசிரியை மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும்.

காவிரி பிரச்சனை சுமார் 100, 150 ஆண்டுகளாகவே இருக்கிறது. ஆனால் தற்போது வெறும் 100 நாட்களில் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் எப்படி முடியும்? காவிரி விவகாரத்தில் ஒட்டு மொத்த பிரச்சனையையும் உருவாக்கியதே தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள்தான். ஆனால் தற்போது அவர்கள் தீர்வு கேட்டும் போராடுகிறார்கள்.

உச்ச நீதிமன்றம் உத்தரவையும் கேட்க மாட்டோம், பிரதமர் நரேந்திரமோடி கூறுவதையும் கேட்க மாட்டோம் என்று சொல்லக் கூடிய அரசு, கர்நாடகாவில் இருந்து அகற்றப்பட வேண்டும். எனவே, கர்நாடகாவில் வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும். பா.ஜனதா வெற்றி பெற்றால்தான் தமிழகத்துக்கு நன்மை நடக்கும்.

சமூக வலைதளங்களுக்குள் பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஊடுருவி எந்த தலைவர்களாக இருந்தாலும் கொச்சைப்படுத்தி கருத்து வெளியிடுகிறார்கள். ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்வதற்காகவே அவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களுக்குள் ஊடுருவுவதை தடுப்பது அவசியம்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மிகவும் திறமையாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அவரை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் முயற்சிக்கிறார்கள். 

தமிழகத்தில் 4 இடங்களில் பஸ் போர்ட் அமைய இருக்கிறது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடக்கின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதனால்தான் கட்டுமானப் பணி தாமதமாகி வருகிறது. 

வருகிற ஜூன் மாதத்துக்குள் மேம்பால பணிகளை முடித்து விட வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். ஆனால் தற்போது அது இயலாத காரணத்தால் ஜூலை மாதத்துக்குள் பணிகள் நிறைவடைந்து பாலம் பயன்பாட்டுக்கு வரும்.

தமிழகத்தில் அமைய உள்ள 4 பஸ் போர்ட்டுகளில் ஒன்று குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் அமைக்கப்பட இருக்கிறது. அதற்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. இதேபோல இரட்டை இரயில் பாதை பணிகளும் மும்முரமாக நடக்கின்றன.

இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டுவதற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடம் சரியில்லை என்பதால், வேறு இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது" என்று அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios