கர்நாடக சிறை விதிகளை மீறி சிறப்புச் சலுகைகளை அனுபவித்ததாக அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு எதிராக அளித்த அறிக்கையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள மாட்டேன் என்றும் இது குறித்து யாராவது உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவித்தால் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவிக்க வாய்ப்புள்ளது என்றும் டிஐஜி ரூபா தெரிவித்தார்.

இது தொடர்பாக  பிபிசி தமிழிடம் டிஐஜி ரூபா  பேசும்போது, பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேடுகளை அம்பலப்படுத்திய நடவடிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விரும்பியே அங்கு ஆதாரங்களைத் திரட்டியதாக தெரிவித்தார்.

சசிகலாவுக்கு சிறையில் வழங்கப்பட்ட வசதிகள், சிறை விதிகளுக்கு முரணானது என்பது அங்கு பணியாற்றிய குறிப்பிட்ட சில அலுவலர்களுக்கு தெரியும் என்றும், உயர்நிலைக்குழு விசாரணை முடிவில், அந்த உண்மை வெளிவரும் என்றும் ரூபா கூறினார்.

சிறப்புச் சலுகைகளை சசிகலா அனுபவித்தது பற்றி அவருக்கான தண்டனையை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றத்தில் யாராவது முறையீடு செய்தால், சசிகலாவின் செயலை மிக கடுமையானதாகக் கருதி உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்க வாய்ப்புள்ளது என்றும் ரூபா தெரிவித்தார்.