சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு புதிய ஏடிஜிபி-யாக அபய்குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அறி்ப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இன்று பொன்.மாணிக்கவேல் ஓய்வுபெற உள்ள நிலையில் புதிய ஏடிஜிபி நியமிக்கப்பட்டுள்ளார்.

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பொன் மாணிக்கவேல் கடந்த 2012-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். அந்த நாள் முதல் இது வரை தமிழக கோயில்களில் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 201 உலோக சிலைகள், 653 கற்சிலைகள், 80 மரச்சிலைகள், 212 ஓவியங்கள் உள்பட 1,146 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட 17 சிலைகளை சர்வதேச போலீசார் மூலம் பொன் மாணிக்கவேல் மீட்டு, தமிழகத்துக்கு கொண்டு வந்து சேர்த்து பெருமை சேர்த்தவர். இந்நிலையில் அவருடைய பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. 

சிலை கடத்தல் தொடர்பான பல வழக்குகளை சிறப்பாக விசாரித்து வருவதால் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வலியுறுத்தி வந்தனர். ஆனால் பணி ஓய்வு பெற சில மாதங்களே இருந்த நிலையில் தமிழக அரசுடன் மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. 

இந்நிலையில் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் இன்று பணி ஓய்வு பெறுவதால் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங்கை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இவர் கரூரில் தமிழ்நாடு காகித நிறுவனத்தில் கண்காணிப்பு அதிகாரியாக அபய்குமார் சிங் பணியாற்றியவர் என்பது குறி்ப்பிடத்தக்கது.