கொடநாடு கொலையில் குற்றவாளியை கண்டுபிடிக்க கோவை சிறையில் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. கூடலூர் மாஜிஸ்திரேட் தமிழச்செல்வன் முன்னிலையில் இந்த அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் ஒன்று நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ளது. இந்த எஸ்டேட்டில் காவலாளியாக வேலை பார்த்த ஓம்பகதூர் என்பவர் கடந்த 23 ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

அப்போது கிஷன் பகதூர் என்ற காவலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு சம்பந்தமாக கனகராஜ், சயான் ஆகியோரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் என்பவர் இன்று காலை சேலம் அருகே கார் விபத்தில் உயிரிழந்தார்.

அதேபோல், சயான் காரின் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்தார். மேலும் காரில் இருந்த அவரது மனைவியும் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சயான் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக இதுவரை 8 பேரை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த மற்றொரு காவலரான கிஷன் பகதூர் கொலையாளிகளை அடையாளம் காட்டுவதாக தெரிவித்தார்.

இதைதொடர்ந்து கோவை நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பு நடைபெற்றது. கூடலூர் மாஜிஸ்திரேட் தமிழச்செல்வன் முன்னிலையில் இந்த அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.