Asianet News TamilAsianet News Tamil

ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வில் வென்றவருக்கு உதவித்தொகையுடன் பயிற்சி… இறையன்பு அதிரடி!!

ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வில் வென்றோர் உதவித்தொகையுடன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று தலைமைச் செயலாளரும் குடிமைப் பணித் தேர்வு பயிற்சித் துறைத் தலைவருமான இறையன்பு தெரிவித்துள்ளார்.

IAS preliminary exam training with scholarship said iraianbu
Author
Tamil Nadu, First Published Nov 2, 2021, 4:41 PM IST

ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வில் வென்றோர் உதவித்தொகையுடன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்துத் தலைமைச் செயலாளரும் குடிமைப் பணித் தேர்வு பயிற்சித் துறைத் தலைவருமான இறையன்பு இன்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் உள்ள பசுமைவழிச் சாலையில் இயங்கி வரும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், கடந்த 56 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருவதாகவும் இந்த மையம், தமிழக இளைஞர்களுக்குக் குறிப்பாகக் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய நிர்வாகத்தில் உயர் நிலையினை அடையும் வகையில், இங்கு பயிலும், மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுவதாக தெரிவித்த தலைமைச் செயலாளரும் குடிமைப் பணித் தேர்வு பயிற்சித் துறைத் தலைவருமான இறையன்பு, இந்த பயிற்சி மையத்தில் பசுமைச் சூழலுடன் வகுப்பறைகள், தங்கும் இடவசதி, தரமான உணவு வழங்கும் விடுதி, சிறந்த நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைந்துள்ளன என்றும் மாணவர்களுக்கு இங்கு கட்டணமின்றி உணவு அருந்தவும், அருமையான இயற்கைச் சூழலில் தங்கிப் படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி அளிப்பதுடன், மாணவர்கள் தங்களை முதன்மைத் தேர்விற்குத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுவதாகவும் இதுதவிர, முதன்மைத் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.3000 ஊக்கத்தொகையும் அளிக்கப்படுவதாகவும் இறையன்பு தெரிவித்துள்ளார்.

IAS preliminary exam training with scholarship said iraianbu

தமிழக மாணவர்கள் எங்கு பயிற்சி பெற்று முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்த பயிற்சி மையத்தில் முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள் என்பதனை கூறிய இறையன்பு, இந்த மையத்தில், இந்த ஆண்டு, 225 பேர் தங்கிப் பயில, சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேர விரும்பும் தேர்வர்கள் நாளை (03.11.2021) மாலை 6.00 மணி முதல் நவம்பர் 07 ஆம் தேதி மாலை 06.00 மணி வரையில் “www.civilservicecoaching.com” என்ற இணையத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார். இட ஒதுக்கீட்டின்படி தெரிவு செய்யப்பட்ட தேர்வர்கள் விவரம் நவம்பர் 09 ஆம் தேதி மாலை 06.00 மணியளவில் இணையத்தில் வெளியிடப்பட்டு, நவம்பர் 10 ஆம் தேதி அன்று சேர்க்கை நடைபெறுவதோடு நவம்பர் 11 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் இணையத்தில் பதிவு மேற்கொள்ளும் மாணவர்கள்,விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி, வருமானச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தமைக்கான இணைய ரசீதை விண்ணப்பத்துடன் இணைத்தளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வருமானம் தொடர்பாக உரிய அலுவலர்கள் அளித்த வருமானச் சான்றிதழினைக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேரும்போது ஒப்படைக்க வேண்டும். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட / பட்டியலினத் தேர்வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு விதிகளுக்குட்பட்டுப் பதிவு செய்தவர்களில் 225 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கும் வசதிகளுடன் குடிமைப் பணி முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்பட உள்ளார்கள் என்றும் இறையன்பு தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios